ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின் வில்லியம்ஸ்! கமல் இரங்கல்

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் தான் இந்த சமூகத்தின் மிக சிறந்த விமர்சகர்கள், தங்களது கோபத்தை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்த கூடியவர்கள்.

கோபத்தை தொடர்ந்து அடக்குவதால் தான் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மிக எளிதில் அழுது விடும் இயல்பு கொண்டவர் ராபின் வில்லியம்ஸ். இதை அவரது படங்களில் காணலாம்.


பொதுவாக அமெரிக்கர்களுக்கு அழுது நடித்தாலே பிடிக்காது, அந்தநிலையை மாற்றியது வியட்நாம் போர். ராம்போ தான் திரையில் அழுதுகாட்டியவர், அதன்பிறகு அப்படியொரு தன்மை கொண்ட நடிகராக இருந்தது ராபின் தான். ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின். ராபின் வில்லியம்ஸின் திறமைக்காக அவரை பாராட்டுகிறேன், ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, அது உண்மையானால் அவரை வெறுக்கிறேன், அவரைப்போன்று ஒருவரிடம் இப்படியொரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை, இது எனது சக இந்திய நடிகர் குருதத்துக்கும் பொருந்தும் என்று தனது இரங்கல் செய்தியில் கமல் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். போன்ற படங்கள், ராபின் மிசஸ் டவுட்பயர் மற்றும் பேட்ச் ஆடம்ஸ் படங்களின் மூலக்கரு என்பது குறிப்பிடத்தக்கது.