சிறுமிகளுக்கான அழகுக்குறிப்பு.

திருமண வயதில் இருப்பவர்களும் திருமணமானவர்களும் மட்டுமே படையெடுத்துக் கொண்டிருந்த பியூட்டி பார்லர்களில், இன்று டீன் ஏஜை எட்டாத குழந்தைகளைக் கூட சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. 18 வயது வரை சருமம் மற்றும் கூந்தலுக்கான பார்லர் சிகிச்சைகளைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. அந்த வயதிலேயே அவர்களது சருமத்தையும் கூந்தலையும் ஊடுருவும் ரசாயனங்கள், அழகைக் குலைக்குமே தவிர, அதிகரிக்காது. பதின்மப் பருவம் முடிகிற வரை பெண் குழந்தைகளின் சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்னைகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பதே நல்லதாகும்.

* புருவங்களையும் மூக்கையும்கூட வெறுமனே அடிக்கடி நீவி விட வேண்டும். 10 வயதுக்குள் இப்படி நீவி விட்டுக் கொண்டே வந்தால், குழந்தையின் புருவங்களும் மூக்கும் நல்ல வடிவம் பெறும்.

* சில பெண் குழந்தைகளுக்கு, அதாவது, 3 - 4 வயதில் உடம்பெல்லாம் முடி வளர்ச்சி இருக்கும். குறிப்பாக முதுகில் அதிகமாக இருக்கும். 3 டீஸ்பூன் சம்பா கோதுமையை 6 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். அது அதன் பாலுடன் சேர்ந்து நன்கு விழுதாக அரைபட்டதும் அதை அப்படியே எடுத்துக் குழந்தையின் முதுகுப் பகுதியில் மெலிதாக பேக் மாதிரித் தடவி 1 மணி நேரம் காய விடவும். 1 மணி நேரம் கழித்து, அதை அப்படியே உரித்து எடுத்து விடலாம். கால்களிலும் இதே போல செய்யலாம். முடி வளர்ச்சி கட்டுப்படுவதுடன் கருகருவென அடர்த்தியாவதும் தடுக்கப்படும். குழந்தைக்கு வலி ஏற்படுத்தாத எளிமையான சிகிச்சை இது.

* சில குழந்தைகள் உதடுகள் வறண்டு போவதால் அடிக்கடி உதடுகளைக் கடித்தும் நாக்கால் தடவி ஈரப்படுத்திக் கொண்டும் இருப்பார்கள். தினம் தலைக்கு எண்ணெய் தடவும் போது, அதே தேங்காய் எண்ணெயில் சிறிது எடுத்து, உதட்டின் மேல் அதே வடிவத்தில் தடவிவிட்டு, குளிக்கச் சொல்லலாம்.

* குழந்தைப் பருவத்திலிருந்தே வாரம் 2 முறைகள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுகிற பழக்கத்தை உருவாக்க வேண்டும். ஒரு முறை வெறும் நல்லெண்ணெயை நிறைய எடுத்து, சொதசொதவெனத் தடவி, ஊற விட்டு சீயக்காய் தூளோ, குளியல் பொடியோ உபயோகித்து அலசி விடலாம். இன்னொரு முறை நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றும் சம அளவு கலந்து தலை முதல் பாதம் வரை தடவிக் குளிக்கச் செய்யலாம். இக்கலவை சருமத்துக்குப் பளபளப்பையும் கூந்தலுக்கு கருமை, அடர்த்தியை கொடுக்கும்.

* சில குழந்தைகளுக்கு சீயக்காய் அலர்ஜி ஏற்படலாம். அவர்களுக்கு இந்தக் குளியல் பொடியை உபயோகிக்கலாம். வெந்தயம் - 200 கிராம், பச்சைப் பயறு - 100 கிராம், கடலைப் பருப்பு - 200 கிராம், கிச்சிலிக் கிழங்கு  - 100 கிராம், பூந்திக் கொட்டை - 100 கிராம், ரோஜா மொட்டு - 100 கிராம் என எல்லாவற்றையும் உலர வைத்து, அரைத்து சலித்துக் கொள்ளவும். தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கரைத்து, எண்ணெய் குளியலுக்கு சீயக்காய்க்குப் பதில் உபயோகிக்கலாம்.

* கூந்தல் ஆரோக்கியம் 10 வயதுக்குள் முறைப்படுத்தப்பட வேண்டும். தினம் 2 வேளைகள் கூந்தலை வாருவதை வழக்கமாக்க வேண்டும். ரோஜா, செம்பருத்தி, தாமரை, மரிக்கொழுந்து ஆகிய அனைத்தும் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் மூழ்கும் அளவுக்குப் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து, தலைக்குத் தேய்த்து வரலாம். ஹேர் கட் செய்ததும் வெட்டியதற்கு எதிர் திசையில் தலையை வாரி, இந்த எண்ணெயைத் தேய்த்து வந்தால், பொடுகு வராமல் தடுக்கப்படும். அடர்த்தியும் அதிகரிக்கும் . தலைக்குக் குளித்த உடன், காய வைக்க டிரையரோ, வெயிலில் நிற்பதோ வேண்டாம். ஈரம் போகத் துவட்டி விட்டாலே போதும்.

* பருவ வயதை நெருங்கும் போது, பெண் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் வேலை செய்ய ஆரம்பிக்கும். அதன் விளைவாக அவர்களுக்கு முகத்தில் எண்ணெய் வழியும். தலைமுடியில் பிசுபிசுப்பு தெரியும். அதனால் அவர்கள் தலையில் எண்ணெய் வைப்பதையும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும் தவிர்ப்பார்கள். இவர்கள் ஏற்கனவே சொன்ன முறையில் குளியல் பொடியை மட்டும் உபயோகித்து (சோப்பை தவிர்த்து) குளித்தாலே எண்ணெய் பசையும் பிசுபிசுப்பும் மறையும்.

* சருமத்தை தினமும் பல முறை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பெண் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். ஒவ்வொரு முறை வெளியே சென்று விட்டுத் திரும்பியதும் முகத்தைக் கழுவ வேண்டும். வெளிப்புற மாசு சருமத்தில் படிந்து, முதலில் ஒயிட் ஹெட்ஸாக கிளம்பும். அதை அலட்சியப்படுத்தினால், பிளாக் ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகளாக மாறும். அதை அழுத்தியோ, பிதுக்கியோ எடுக்க முயன்றால், பருக்களில் கொண்டு போய் விடும். சருமத் துவாரங்களில் படிகிற அழுக்கு கலந்த எண்ணெயை முறையாகக் கழுவி சுத்தப்படுத்துவதன் மூலம் டீன் ஏஜில் பருக்கள் வருவதையும் தவிர்க்கலாம். இந்த வயதுப் பெண் குழந்தைகள் கூடிய வரையில் சோப்பை தவிர்த்து, குளியல் பொடியை மட்டுமே உபயோகிப்பது சருமத்தைக் காக்கும்.