ஹீரோ கிரீடத்தை கழற்றி வீசிய வடிவேலு!

நான் காமெடியன் என்பது அந்தக்காலம். இனிமேல் எப்போதுமே நான் கதாநாயகன்தான் என்று தெனாலிராமன் படத்தில் நடித்து வந்தபோது ஓங்கி குரல் கொடுத்து வந்தார் வடிவேலு. அதன்காரணமாக காமெடி வேடங்களில் நடிப்பதற்காக தன்னை அணுகியவர்களை உடனடியாக திருப்பி விட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால், பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவான தெனாலிராமன் வடிவேலுவின் நம்பிக்கைக்கு பெரிய வேட்டு வைத்து விட்டது. படம் வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு ஓட்டம் பிடித்து,. படத்தை தயாரித்தவர்களுக்கும் கையை கடித்து விட்டது. இருப்பினும் ஹீரோ கிரீடத்தை கழற்ற மாட்டேன் என்று சில மாதங்களாக அடம்பிடித்துக்கொண்டிருந்த வடிவேலு, இப்போது சத்தமில்லாமல் ஹீரோ வேசத்தை கலைத்து விட்டு மீண்டும் காமெடியன் அரிதாரத்தை பூசிக்கொண்டு நிற்கிறார்.


அதன்விளைவாக, கார்த்தி நடிக்கும் ஒரு படத்தில் ஏற்கனவே கமிட்டானவர், தற்போது இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கும் படத்திற்கும் கமிட்டாகியிருக்கிறார். இதையடுத்து, தனது காமெடி என்ட்ரியை அமர்க்களமாக தொடங்கி, விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என்று நினைக்கும் வடிவேலு, தலைநகரம், வின்னர் படங்களில் தான் நடித்தது போன்று வயிறு குலுக்க சிரிக்க வைக்கும் காமெடி ட்ராக்குகளை ரெடி பண்ணுமாறும் தனது காமெடி இலாகாவிற்கு உத்தரவு போட்டுள்ளார்.