சினிமா பாணியில் நிஜத்திலும் முதல்வருடன் மோதிய சுரேஷ்கோபி!

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் அரசியலை மையப்படுத்தி படங்கள் வந்தன. அந்த படங்களில் வில்லன்களாக நடிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக ரஜினி, விஜயகாந்த், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்கள் ஆவேசமாக வசனம் பேசி வந்தனர். சில சமயங்களில் அவர்கள் பேசும் வசனங்கள் நிஜ அரசியல்வாதிகளை சாடுவது போலவும இடம்பெற்று அரசியல் வட்டாரத்தையும் ஆட வைத்தது.

இதேபோல் மலையாள சினிமாவில் அதிரடி அரசியல் படங்களில் நடித்து வருபவர் சுரேஷ்கோபி. தான் நடிக்கத் தொடங்கியது முதல் இப்போது வரை சில நிஜ அரசியல்வாதிகளின் கதைகளில் நடித்து வரும் அவர், பல படங்களில் முதல்வரே தப்பு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.


அப்படிப்பட்ட சுரேஷ்கோபி, சமீபத்தில் ஆருண்முலா அணை சம்பந்தமாக கேரள முதல்வர் உம்மன் சண்டி சொன்ன ஒரு கருத்து தவறாக இருக்கவே, எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒரு பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்களிடம் கேட்டறிந்த பிறகே அது பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்று முதல்வரையே தைரியமாக விமர்சித்துள்ளார்.

சினிமாவில் தான் முதல்வர்களைப் பார்த்து அதிரடியாக பதிலடி கொடுக்கும் சுரேஷ்கோபி, இப்போது நிஜ முதல்வரையே விமர்சித்துள்ள இந்த விவகாரம் கேரள அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாம். ஆனால், சக நடிகர்களோ சுரேஷ்கோபியின் இந்த துணிச்சலை பக்கம் பக்கமாக பாராட்டி வருகிறார்களாம். ஆனால் சுரேஷ்கோபியின் இந்த விமர்சனத்துக்கு கேரள முதல்வரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லையாம்.