முழு நேர கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகி விட்ட இளையதிலகம் பிரபு, இந்த மாதிரியான வேடங்களில மட்டும்தான் நடிப்பேன் என்று சிலரைப்போன்று கோடு போட்டு நடிக்காமல், தனக்கு பிடித்திருந்தால், அப்பா, அண்ணன், மாமா, வில்லன் என அனைத்து வகையான வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில், ஆல் இன் ஆல் அழகுராஜா, என்னமோ ஏதோ, என்னமோ நடக்குது போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது டாணா, காசு பணம் துட்டு போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் பிரபு நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பதாக செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது பிரபுவும் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஜில்லா படத்தில் கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ போன்று மலையாள நடிகர் மோகன்லால் நடித்தது போன்று இந்த படத்தில் பிரபுவின் கதாபாத்திரமும் கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.
