தமிழுக்கு வராத சமந்தா, தெலுங்குக்கு வந்தார்...!

லிங்குசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையைமப்பில் உருவாகியுள்ள 'அஞ்சான்' படத்தின் இசை வெளியீடு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற போது அந்தப் படத்தின் நாயகியான சமந்தா கலந்து கொள்ளவில்லை. அவர் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததாகவும், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சொன்னார்கள்.

ஆனால், அவர் சென்னையில் இருந்து கொண்டேதான் அந்த விழாவிற்கு வராமல் தவிர்த்துவிட்டார் என்றும் அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியானது.

இதனிடையே 'அஞ்சான்' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'சிக்கந்தர்' படத்தின் இசை வெளியீடு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் சமந்தா கலந்து கொண்டார். தமிழில் ஒரு பிரேக்கை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சமந்தா, தமிழ்ப் படத்தின் இசை வெளியீட்டுக்கு வராமல், அதே படத்தின் தெலுங்கு டப்பிங் படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா, 'நான் ஈ' இயக்குனர் ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டு 'சிக்கந்தர்' படத்தின் இசையை வெளியிட்டனர். ஆனால், படத்தின் இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோரும் கலந்து கொள்வதாக சொல்லப்பட்டது, ஆனால் அவர்களும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.