எங்கு போய் தேநீர் குடிக்க போனாலும் மற்றவரிடம் ‘‘ஷுகர் நார்மல்தானே?’’ எனக் கேட்கும் பழக்கம் சாதாரணமாக வந்துவிட்டது. ஆனால் சர்க்கரை விஷயத்தில் உஷாராக இருக்கும் பலர் உப்பு பற்றி யோசிப்பதே இல்லை ‘‘உங்களுக்கு உப்பு எவ்வளவு போடணும்?’’ என்ற கேள்வியே நமக்கு பரிச்சயமில்லை. ஆனால், சமீபத்தில் ‘உலக உயர் ரத்த அழுத்த நோய் நாளை’க் கடைப்பிடித்த உலக சுகாதார நிறுவனம், உலக அளவில் ஏற்படுகிற இறப்புகளுக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக உப்பைக் குறிப்பிட்டிருக்கிறது. ‘உப்புதானே... என்ன செய்துடும்?’ என்ற நம் அசட்டை மனப்போக்கை சட்டை பிடித்து உலுக்குகிறது இந்தத் தகவல்.
