நடிகர் பா.விஜய் என்று அழைக்க வேண்டுமாம்!

1996 ஆம் ஆண்டில் பாக்யராஜ் இயக்கிய ஞானப்பழம் படத்தில் மணிமாடக் குயிலே என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் பா.விஜய். அதன் பிறகு பல நூறு பாடல்களை எழுதி பேரும் புகழும் பெற்றார். உச்சகட்டமாக ஆட்டோகிராப் படத்தில் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு 2005 ஆம் ஆண்டு தேசிய விருதும் பெற்றார்.

பாடலாசிரியராக செமத்தியாய் சம்பாதித்துக்கொண்டிருந்த பா.விஜய்க்கு திடீரென ஹீரேரவாக நடிக்கும் ஆசை ஏற்பட்டது. தாய்காவியம் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். பாதி வளர்ந்தநிலையில் அப்படம் ட்ராப்பானது. பிறகு ஞாபகங்கள் என்ற படத்தில் நடித்தார். ஒன்றிரண்டு நாட்களிலேயே தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டது இந்தப்படம்.

பிறகு லாட்டரி வியாபாரி மார்ட்டின் தயாரிப்பில் பல கோடி செலவில் இளைஞன் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் சில லட்சங்களைக் கூட கலெக்ட் பண்ணவில்லை. அதோடு நடிக்கும் ஆசையை மூட்டைகட்டி வைத்துவிட்டு பாட்டு எழுதுவதில் கவனம் செலுத்துவார் என்று பலரும் எதிர்பார்த்தநிலையில், மறுபடி தகடு தகடு என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் பா.விஜய்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்காப்பி ரெடியாகி பல மாதங்களாகிவிட்டன. படத்தை வாங்க ஆள் இல்லை. எனவே பரணில் கிடைக்கிறது. பா.விஜய் என்ற நடிகரின் நிலவரம் இப்படியாக கலவரமாகக்கிடக்க... தான் கலந்து கொள்ளும் விழாக்களில் தன்னை மேடைக்கு அழைக்கும்போது, நடிகர் பா.விஜய் என்று குறிப்பிடும்படி வற்புறுத்துகிறாராம் பா.விஜய்.