ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் சூர்யா...?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'கஜினி' திரைப்படம் சூர்யாவின் மாஸ் இமேஜ் உயர முக்கிய காரணமாக அமைந்தது. தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.

அதன் பின் சூர்யாவின் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு, அவருக்கென அங்கு ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கியது.

 சூர்யா நடித்து விரைவில் வெளிவர இருக்கும் 'அஞ்சான்' படமும் அங்கு 'சிக்கந்தர்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. கடந்த வாரம் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டில் எண்ணற்ற ரசிகர்கள் கலந்து கொண்டனர். தெலுங்குத் திரையுலகிலும் இந்த படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


நேரடித் தெலுங்கப் படங்களுக்கு சவால் விடும் வகையில் 'சிக்கந்தர்' படம் அமையும் என்று தெலுங்கு வினியோகஸ்தர்கள் கருதுகிறார்களாம். இதையடுத்து சூர்யா நேரடி தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் யார் என்பதும் முடிவாகியுள்ளது. இந்தப் படத்தை அநேகமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கலாம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இப்போது இரண்டாம் பாகம் எடுப்பது ஒரு ஃபேஷனாகி விட்ட நிலையில் சூர்யாவுக்கு மிகப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த 'கஜினி' படத்தின் இரண்டாம் பாகமாக அந்தப் படம் இருக்குமா அல்லது வேறு புதிய கதையாக இருக்குமா என்பது விரைவில் தெரிய வரும். சூர்யாவிற்கும், கௌதம் மேனனுக்கும் இடையே உருவான பிரச்சனை போன்றுதான் சூர்யாவிற்கும், ஏ.ஆர்.முருகதாஸுக்கும் பிரச்சனை உள்ளதாக கோலிவுட்டில் பேசிக் கொள்ளும் சூழ்நிலையில், இவர்கள் இருவரும் மீண்டும் சேர்வது ஆச்சரியமாக உள்ளது என இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.