கடைசியில் அது வந்தே விட்டது. ஆப்பிள் விரைவில் கைகடிகார சந்தையில் வாட்ச் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையத்தில் வதந்திகள் உலாவின. கடைசியில் ஆப்பிள் வாட்ச் என்ற கலக்கலான சாதனத்தை மார்ச் 9 அன்று அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.
ஆப்பிளின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமான பின், புரட்சிகரமான எதுவும் இனி ஆப்பிளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்ற கணிப்பை அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பொய்ப்பித்துவிட்டார். அடிப்படை மாடலுக்கு 349 டாலர்கள் முதல் அசத்தலான தங்க மாடலுக்கு 10 ஆயிரம் டாலர்களுக்கு மேல் வரை விலை நிர்ணயித்திருக்கிறது ஆப்பிள். 'ஆப்பிள் இதுவரை இவ்வளவு பர்சனலான ஒரு சாதனத்தை வடிவமைத்ததில்லை' என்கிறார் ஆப்பிளின் ஸ்டார் வடிவமைப்பாளர் ஜோனதன் ஐவி.
