மீண்டும் சினிமாவில் தேவயானி

காதல் கோட்டைக்கு பிறகு பல வெற்றிக் கோட்டைகளை கட்டிய தேவயானி 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அவரின் அப்பாவித்தனமான குழந்தை முகம் எல்லோருக்கும் பிடிக்கும். 2004ம் ஆண்டுதான் அவர் பிசியாக நடித்த கடைசி ஆண்டு.

அதன் பிறகு அவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். அங்கும் நம்பர் ஒண் நடிகையாக வலம் வந்தார். இடையில் சில படங்களில் நடித்தார். அவற்றில் சில வெளிவரவில்லை. தன் கணவர் ராஜகுமாரன் இயக்கிய திருமதி தமிழ் தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.

தற்போது தேவயானி மீண்டும் முழுமூச்சுடன் சினிமாவில் நடிக்க முடிவு செய்து விட்டார். விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தில் ரஞ்சித்தின் மனைவியாக நடிக்கிறார். சமீபத்தில் பொள்ளாச்சி பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். படத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமான கேரக்டராம். இதற்கு பிறகு கண்ணியமான அக்கா, அண்ணி கேரக்டரில், பெண்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் கேரக்டரில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.