மைக்ரேன் எனப்படும் தலைவலி:

"எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்’. இதில் ஏற்படும் தலைவலி என்பது தலை, சதை, இரத்தக் குழாய்கள், கண், காது இப்படி பல பிரிவுகளை உட்கொண்டது. தலைவலி என்பது ஒரு ஆலமரம் போல். இதன் கீழ் சுமார் 200-க்கும் மேற்பட்ட காரணங்களை குறிப்பிட முடியும். ஆனால், பொதுவில் இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

முதல் பிரிவு சாதாரண, எளிதில் தீர்வு காணக்கூடிய பொதுக் காரணங்களைக் கொண்டது. இரண்டாவது பிரிவு கடினமான நோய் காரணங்களைக் கொண்டு ஏற்படுவது.90 சதவீத மக்களுக்கு முதல் பிரிவான சாதாரணத் தலைவலியே ஏற்படுகின்றன. மைக்ரேன் என்பது டென்ஷன் வகையால்  மிகச் சாதாரணமாக காணப்படக்கூடிய ஒன்று.

மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி:

* மைக்ரேன் தலைவலியின் அறிகுறிகள் தலைவலி, வாந்தி, வெளிச்சம் பார்க்க முடியாமை, சத்தம் கேட்க முடியாமை போன்றவை. இவர்கள் தலையைச் சுற்றி ஒரு துணியினை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு இருட்டு அறையில் இருப்பர். இந்த தலைவலி வந்தால், இவர்களை 2-3 நாட்கள் பாடாய் படுத்தி விடும்.

மைக்ரேன் பொதுவில் ஒருபக்க தலைவலியாக ஆரம்பித்து, பிறகு வலியில் ஆளை நகர விடாமல் பிரட்டி விடும். மூளையைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்கள் சுருங்குவதோ, விரிவதோ இதன் காரணமாக முடியும் என்று கூறப்பட்டாலும் இன்னமும் இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டே வருகின்றன.

பொதுவான காரணங்களாக அறியப்படுபவை:

* மன உளைச்சல், டென்ஷன்.

* உடலில் போதுமான அளவு நீரின்மை.

* சரியான நேரத்தில் உணவின்மை.

* பிரயாணம்.

* தட்பவெப்ப நிலை மாறுதல்.

* அதிக ஒளி, சத்தம்.

* ஹார்மோன் நிலை மாறுபாடு.

மைக்ரேனுக்கு, சாதாரண வலி நிவாரண மாத்திரைகளே உபயோகப் படுத்தப்படுகின்றன. சிலருக்கு மருத்துவர் சில மாத்திரைகளை பரிந்துரை செய்வார். ஒரு மாதத்தில் எத்தனை முறை இத்தாக்குதல் ஏற்படுகிறது என்பதனைப் பொறுத்தே மருத்துவர் மருந்தின் முறையினை முடிவு செய்வார்.