டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நிலை கவலைக்கிடம்

84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடம் அடைந்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நலம் விசாரித்தார். தமிழ் பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர். இவருக்கு 84 வயதாகிறது.

சமீபத்தில் இவருடைய மகன் கைலாசம் மரணம் அடைந்தார். அந்த சோகம் கே.பாலச்சந்தரை மிகவும் பாதித்தது. அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவே இல்லை. அதைத் தொடர்ந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நிலை கவலைக்கிடம்
நேற்று காலை அவருடைய உடல்நிலை கவலைக்கிடம் ஆனது. தகவல் அறிந்ததும் டைரக்டர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து ஆகியோர் நேற்று காலை ஆஸ்பத்திரிக்கு சென்று கே.பாலச்சந்தரை பார்த்தார்கள்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபின் கே.பாலச்சந்தரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கே.பாலச்சந்தரின் உடல்நிலை பற்றி அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

நலமாக இருக்கிறார்

அந்த அறிக்கையில், “84 வயதான பழம்பெரும் டைரக்டர் கே.பாலச்சந்தர் காய்ச்சல் மற்றும் வயோதிக உடல்நலக்குறைபாடு காரணமாக சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போதைய நிலவரப்படி அவர் நல்ல உடல்நிலையில் ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் கொடுக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.

ரஜினிகாந்த்

இதற்கிடையே கே.பாலச்சந்தரின் உடல்நிலை பற்றி கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை ஆஸ்பத்திரிக்கு வந்தார். மாலை 5.45 மணிக்கு கே.பாலச்சந்தர் அனுமதிக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்குள் சென்ற ரஜினிகாந்த் சுமார் 25 நிமிடத்திற்கு பின்னர் 6.10 மணி அளவில் வெளியே வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கே.பாலச்சந்தர் நலமாக உள்ளார். நான் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு சிரித்தவாறு நலமாக இருக்கிறேன் என்று பதில் அளித்தார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்றார்.

அழுதுகொண்டே வந்த குஷ்பு

இதே போன்று மருத்துவமனை நுழைவு வாயிலில் காரில் வந்து இறங்கிய நடிகை குஷ்பு தேம்பி, தேம்பி அழுதுகொண்டே மருத்துவமனைக்குள் ஓடினார். இதனால் கே.பாலச்சந்தருக்கு ஏதோ விபரீதம் நடந்ததாக மருத்துவமனை வளாகத்தில் திரண்டு நின்ற நிருபர்கள், புகைப்படநிபுணர்கள் மற்றும் வீடியோ கிராபர்கள் கருதினர்.

இதனை தொடர்ந்து டைரக்டர் வசந்த், மனோபாலா, பிரமிட் நடராஜன், கே.எஸ்.சீனிவாசன், மோகன் ராம் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கே.பாலச்சந்தரை பார்ப்பதற்காக உள்ளே சென்றனர்.

வதந்திகளை பரப்ப வேண்டாம்
கே.பாலச்சந்தரை பார்த்துவிட்டு சிறிது நேரத்திற்கு பின்னர் வெளியே வந்த குஷ்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, கே.பாலச்சந்தர் ஒரு மேன்மையான மனிதர். அவர் உடல்நிலை பற்றி யாரும் விரும்பத்தகாத வதந்திகளை பரப்பவேண்டாம். இவ்வாறு வதந்திகளை பரப்புவதால் அவருடைய குடும்பத்தினருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். நான் அவரை பார்த்து பேசினேன். என்னை பார்த்து அவர் சிரித்து பேசினார். கே.பாலச்சந்தர் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார். டைரக்டர் வசந்த் சில நாட்களாகவே கே.பாலச்சந்தரை உடன் இருந்து கவனித்து வருகிறார் என்றார்.