வெயில் காலத்திற்கான குறிப்புகள்.

பழச்சாறுகள் மற்றும் குளிர்பானங்கள் வெயிலுக்கு இதமாக இருப்பதுபோல இருந்தாலும் தாகத்தை முழுவதுமாக போக்குவது தண்ணீர் மட்டும்தான். பழச்சாறு தயாரிக்கும்போது சர்க்கரை சேர்க்கக்கூடாது.

தோல்தான் வெயிலால் அதிகம் பாதிக்கப்படுவது. அதனால் பால் பொருட்கள், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற பழங்கள், கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடவும்.

குளிப்பதற்கு முன் சிறிது பயத்தமாவை உடலில் பூசி ஊறியதும் குளித்தால் குளிர்ச்சியாக இருக்கும்.
சூடு தணிக்கும் சுரைக்காய்
வெயிலுக்கு சுரைக்காய் நல்லது. ஒரு சுரைக்காய் ஒரு குடம் நீருக்கு சமம். சுரைக்காயை சாம்பார் அல்லது கூட்டு வைத்து சாப்பிடலாம். அதேபோல பூசணி, சௌசௌ, முள்ளங்கி ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வெயில் காலத்தில் அனைவரையும் படுத்துவது நீர்க்கடுப்பு. இதைத் தவிர்க்க வயிற்றில் விளக்கெண்ணையை தடவலாம். புளியங்கொட்டையை வறுத்துச் சாப்பிட்டாலும் சூடு மட்டுப்படும்.

சூட்டுக்கட்டிகள் மீது திருநீற்றுப்பச்சிலையை அரைத்து பற்றுப்போட்டால் கட்டிகள் விரைவில் குணமாகும்.

வெட்டிவேரை ஜன்னலில் செருகி வைத்து அதில் தண்ணீர் தெளித்தால், வீட்டுக்குள் நுழையும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வெட்டிவேரால் பின்னப்பட்ட ஜன்னல் திரைகளையும் பயன்படுத்தலாம்.

புளிக்காத மாவு

தர்பூசணி சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு, கசக்கிய புதினா தழை, சர்க்கரை சேர்த்து குடித்தால் வெயிலால் ஏற்படும் உடல் சூடு தணியும்.
தர்பூசணியில் இனிப்பு சர்பத்தான் செய்யவேண்டும் என்பதில்லை. பழத்தை தோல் சீவி மிக்ஸியில் போட்டு புளிக்காத மோர்விட்டு மிளகு, சீரகம், தட்டிப்போட்டு குடித்துப் பாருங்கள். சம்மர் முழுக்க இதை விடமாட்டீர்கள்.

தர்பூசணியின் வெள்ளைப் பகுதியை கூட்டு செய்யலாம். இல்லையெனில் தர்பூசணி தோலை மெல்லியதாக சீவிவிட்டு, ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்துவிட்டு துருவினால் எளிதாக துருவ வரும். இதில் தயிர்ப்பச்சடி செய்யலாம்.

நுங்குடன் சர்க்கரை அல்லது கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து பொடியாக நறுக்கிய மாம்பழம், வாழைப்பழம் கலந்து வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்குக் கொடுத்தால் நிச்சயம் உங்களுக்கு பாராட்டு மழைதான்!

கேரட்டை சதுரமாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது சிறிது கேரட், சர்க்கரை, ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் அரைத்து பால் சேர்த்ஷேக் அசத்தல் சுவையுடன் அருமையான மில்க் தயார்.

இரண்டு தக்காளி பழங்களை மிக்ஸியில் விழுதாக அரைத்து நீர் மோரில் கலந்து ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து குடித்து வந்தால் களைப்பும் சோர்வும் பறந்துபோகும்.

ஒரு கப் ஜவ்வரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்தால் நன்றாக வெந்துவிடும். அதில் உப்பு, மோர் ஊற்றி கரைத்து குடித்தால் வயிற்று வலியும் உடல் சூடும் தணியும்.

கோடையில் தோசை மாவு சீக்கிரம் புளித்துவிடும். இதைத் தவிர்க்க அரிசி, உளுந்தை கழுவி ஊறவைக்கும்போது ஒரு மணிநேரத்தில் அந்தத் தண்ணீரை வடித்துவிட்டு வேறு தண்ணீரை ஊற்றவும். இப்படி இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் மாற்றினால் மாவு சீக்கிரம் புளிக்காது.