கிட்ணாவுக்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையாகி விடுவாராம் தன்ஷிகா!

நிமிர்ந்து நில் படத்தை இயக்கியபோது அமலாபாலின் ஒத்துழைப்பைப் பார்த்த டைரக்டர் சமுத்திரகனி, எனது அடுத்த படத்திலும் அமலாபால்தான் நாயகியாக நடிப்பார் என்று கூறினார். அதோடு அந்த படத்தில் அமலாபாலை 2 விதமாக கேரக்டர்களில் நடிக்க வைக்கிறேன் என்று சொன்னார். அதனால், முதன்முறையாக டபுள் ரோலில் நடிக்கப்போகிறேன் என்று அமலாபாலும் சொல்லி புழகாங்கிதமடைந்து வந்தார்.

ஆனால், யார் கண் பட்டதோ அந்த படத்தில் அமலாபால் நடிக்க ஒத்துக்கொண்ட நிலையில், அவர் காதலித்து வந்த டைரக்டர் ஏ.எல்.விஜய்க்கு அவரது பெற்றோர் உடனடியாக திருமணம் செய்து வைக்க முற்பட்டதால், வேறு வழியில்லாமல் நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு திருமண பந்தத்தில் இணைந்தார் அமலாபால்.


அதனால், அமலாபால் வேடத்தில் எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என்று தீவிரமாக யோசித்து வந்த சமுத்திரகனி, இப்போது பரதேசி தன்ஷிகாவை புக் பண்ணியுள்ளார். ஆனால் முதலில் இரண்டு கெட்டப் என்று சொன்ன சமுத்திரகனி இப்போது மூன்று கெட்டப் என்று கூறியுள்ளார். அதனால், ஒரே படத்தில் 3 மாறுபட்ட கெட்டப்புகளில் நடிக்கும் அரிய வாய்ப்பினை பெற்றிருக்கிறார் தன்ஷிகா.

இதுபற்றி அவர் கூறுகையில், இந்த கிட்ணா படத்தில் சின்ன வயது முதல் 45 வயது வரையிலான மூன்று காலகட்டங்களில் கதை நகர்கிறது. அதனால் ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஏற்ப எனது உடல் எடையை குறைத்து நடிக்கிறேன். அதேசமயம் 45 வயது கேரக்டருக்கு மேக்கப்பே போடாமல் நடிக்கிறேன். பரதேசி படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நான் நடித்த கேரக்டரை பார்த்து என் மீது நம்பிக்கை கொண்டுதான் இந்த கிட்ணா படத்தில் என்னை நடிக்க வைக்கிறார் சமுத்திரக்கனி என்று சொல்லும் தன்ஷிகா, இந்த படத்தைப் பொறுத்தவரை எனது திறமைக்கு விடப்பட்டிருக்கும் பெரிய சவால்.

அதனால் இதுவரை நான் நடித்துள்ள பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, யாயா போன்ற படங்களை விட இந்த படத்தில் உயிரைக்கொடுத்து நடிக்கப்போகிறேன். அந்த வகையில் இதுவரை கவனிக்கப்படாத நடிகையாக இருந்த நான், இனி கவனிக்கப்படும் முக்கிய நடிகையாகி விடுவேன் என்கிறார் தன்ஷிகா.