நகம் கடித்தல் ஆபத்தான பழக்கமாகும்.

நம்மில் பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. நம் நாட்டில் அதை நாம் சாதாரணமாக பார்க்கிறோம். ஆனால், அதுவும் மனநல பாதிப்புதான் என்று அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப் பின் வெளிப்பாடுதான்.

காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோல செய்கின்றனர். இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது.

இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக மனோ தத்துவவியல் வல்லுநர் கரோல் மேத்யூஸ் தெரிவித்தார். நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், சுகவீனம் ஏற்படுகிறது.பல ஆண்டுகளாக நகம் கடிக்கும் பழக்கத்தை விட முடியாதவர்கள் மனநல நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம். மனநலப் பயிற்சிகளை  மேற்கொண்டு பயன் பெறலாம்.

நகம் கடிப்பவர்களின் விரல் நுனிகளில் கிருமிகள் சேர்ந்து ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் (human papilloma virus) தாக்குதல் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது அதிகமாகும்போது   புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் உண்டு. நகம் கடிப்பதால் பற்களில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள்  ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுதாக மூட முடியாத நிலை கூட ஏற்படும்.

நகமானது  பாக்டீரியா வளரும் இடம். சல்மனெல்லா (Salmonella), இ.கோலி (E.Coli) பாக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன. நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும். இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படும்.

உடல் எதிர்ப்புச் சக்தி பாதிப்படைந்து நோய்களுக்கு வழிவிட காரணமாகும். பாரனைஷியா (Paronychia) என்கிற தோல் வியாதி ஏற்படவும்  வாய்ப்பிருக்கிறது. நகங்களில் இருக்கும் பாக்டீரியா, ஈஸ்ட், நுண்ணுயிரிகள் ஒன்று சேர்ந்து நகங்களின் மேல் தோலை சிவப்பாக்கி, தடித்து வீங்க  வைத்துவிடும். காலப்போக்கில்   சீழ் கட்டவும் வாய்ப்பிருக்கிறது. அதை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே சரி செய்ய முடியும்.