ஸ்பூன் வேண்டாம் கையாலே சாப்பிடுங்கள்.

தமிழர்களில் கிட்டத்தட்ட பலர் கையால் தான் உணவு அருந்த பயன்படுத்தி வருகின்றனர் . ஆனால் பலர் மேற்கத்திய முறை என்ற பெயரில் ஸ்பூன் போன்றவற்றை பயன்படுத்தி உணவு அருந்தி வருகின்றனர் . அது தான் நாகரிகம் என்றும் பலர் அதையே பழக்கப்படுத்தி கொள்கின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் கற்று தந்த முறையே நாம் மறப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை கீழ் உள்ள பயன்களை வாசித்தால் அறிந்துகொள்ளலாம்.

1 ) செரிமானத்திற்கு உதவும் : நமது உடம்பில் மிக முக்கியமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற உணர்வுகளில் ஒன்று தொடுதல் உணர்வுவாகும்.நாம் கையினால் உணவு அருந்தும் போது அதில் தொடுதல் உணர்வு ஏற்படுவதால் , நமது வயிற்றை அது செரிமானத்திற்கு தயாராக இருக்கும் படி நமது மூலை செய்தி அனுப்புகிறது . இதனால் செரிமானம் நன்றாக நடக்கிறது.

2 ) உயிர் சக்திகளை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது  : ஆயுர்வேதத்தின் படி நமது உடம்பு ஐந்து உயிர் சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது . மேலும் நமது கைகளில் உள்ள ஐந்து விரலும் ஐந்து பூதங்களை குறிக்கிறது . இந்த ஐந்து ஆற்றலில் ஒன்று சமநிலையில் இருந்து விலகினாலும் , நமது உடம்பிற்கு கேடு விளைவிக்கும் . நாம் கையினால் உணவு அருந்தும் போது , நமது அனைத்து விரல்களையும் நாம் உபயோகப்படுத்துவதால் , நமது உயிர் சக்திகள் அனைத்தும் ஆற்றல் அடைகிறது .
3 ) சாப்பாட்டில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும் : கையினால் உணவு அருந்துவதன் மூலம் , நாம் என்ன சாப்பிடுகிறோம் என்ற உணர்வு நமக்கு இருக்கும் . ஏதாவது கல் போன்றவை தட்டுப்பட்டாலும் நீக்கி விடலாம் . நமது கவனம் உணவில் இருக்க கையினால் சாப்பிடுவது தான் சிறந்தது. 
4 ) உணவு சூடாக இருப்பதை அறிந்து கொள்ள : நமது கை தான் சிறந்த வெப்பம் அறியும் கருவி . நமது கையை உணவு அருந்த பயன்படுத்துவதன் மூலம் சூடாக இருக்கும் உணவை நாம் ஆற வைத்து உண்ண உதவியாக இருக்கும் . சூடாக இருக்கும் உணவை தவிர்ப்பதன் மூலம் நமது நாவினை பாதுகாக்கலாம்.

பழைய விஷயங்கள் என்றாலே ஒரு மாதிரி பார்த்து இப்போ நிகழ்காலத்துக்கு வாங்க, யாராவது கைகளை பயன்படுத்தி ஏதாவது செய்கிறார்களா சொல்லுங்கஎன கூறுபவர்களே அதிகமாக உள்ளனர்.
நம் வீட்டில் அந்தக் காலத்துப் பெரியவர்கள்  உணவுப் பொருட்களை அளக்க ஆழாக்கு, கரண்டி(ஸ்பூன்) பயன்படுத்த மாட்டார்கள். ஒரு பிடி அரிசி, ஒரு சிட்டிகை உப்புசின்ன கோலி அளவு புளிஎன்று கை விரல்களாலேயே அளவு காண்பிப்பார்கள். புட்டு மாவிற்கு பதம் சொல்லும்போது கையால் பிடித்தல் பிடிபடவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும் என்பார்கள். வெல்லப்பாகுப் பதமும் இரண்டு விரல்களால் கரைந்த வெல்லத்தைத் தொட்டுப் பார்த்து ஒரு கம்பிப் பதம், இரண்டு கம்பிப் பதம் என்பார்கள். கெட்டியான உணவுப் பொருளோ, அல்லது திரவப் பொருட்களோ அவற்றை அளக்க கையளவுகளே இருக்கின்றன.

சின்ன வயதில் அம்மா கையால் கலந்து நம் கையில் சாதம் போடுவாள். அதில் சின்னதாக ஒரு குழி செய்து அதற்குள் குழம்பு விட்டுக் கொண்டு சாப்பிடுவோமே, அந்த ருசி இன்னும் நாவில் இனிப்பதற்குக் காரணம் அம்மாவின் கை ருசி தானே?

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் சாப்பிடுவோமே, நினைவிருக்கிறதா? கல்சட்டியில்  இரவு நீர் ஊற்றப்பட்ட சாதத்தில்  காலையில் உப்பு, மிளகாய், துளி பெருங்காயம்  நுணுக்கிப் போட்டு  நீர் மோர் ஊற்றி பாட்டி தரும் ஆரோக்கிய பானம் சாதேர்த்தம் (சாதமும் நீரும் கலந்த திரவம்) அது நமது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதையும் குளிரப் பண்ணுமே, அதற்குக் காரணம் உப்பு மிளகாய் பெருங்காயம் மட்டுமா? இல்லையே, பாட்டியின் கை மணமும் அதில் சேர்ந்திருப்பதால் தானே?

இட்லிக்கு அரைத்து வைக்கும்போது என்னதான் அரவை இயந்திரம் அரைத்தாலும் கடைசியில் நம் கைகளால் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கலந்து வைக்கிறோம், இல்லையா? அடுத்தநாள் காலையில் பொங்கி இருக்கும் மாவைப் பார்த்து நம் மனமும் பொங்கி, இன்றைக்கு மல்லிகைப் பூ போல இட்லி என்று பூரிக்கிறோமே!

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நீரை சிறிது சிறிதாக கொட்டி, மாவை கைகளால் நன்றாக அளைந்து, உருட்டி  பிசையுங்கள். நீங்கள் அதிக  நேரம் பிசையப் பிசைய மிக மிக மிருதுவான சப்பாத்திகள் வரும். முக்கியமாக ஃபூல்கா சப்பாத்திக்கு கையால்தான் கலக்க வேண்டும். அப்போதுதான் நெருப்பில் நேரிடையாக சப்பாத்திகளைப் போடும்போது அவை உப்பும்.

இப்படி அநேக விடயங்கள் இருக்க எதற்கு மற்றவரை போல நீங்களும் ஸ்பூன் போன்றவற்றை பயன்படுத்தி உணவு அருந்த நினைக்கிறீர்கள். இனியாவது மேலே வாசித்தவற்றை நினைவில் வைத்து நம் பழக்கவழக்கப் படி கையில் சாப்பிட முயற்சியுங்கள்.