ஆறுகிற வரை அவதி!

பெயருக்கும் பிரச்னைக்கும் அப்படியொன்றும் தொடர்பில்லை. சேற்றில் கால் வைக்காதவர்களுக்கும் வரக்கூடியது சேற்றுப்புண். வந்தால் ரணகளம்தான்... ஆறுகிற வரை அது கொடுக்கும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல... சேற்றுப்புண் வரக் காரணம் என்ன? வருவதற்கு முன் விரல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள், வந்தபின் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்த சந்தேகங்களுக்கு சரும மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

 ‘‘நம் கால்களுக்கு சேதாரம் ஏற்படுத்தி, நம்மை செயல்பட விடாமல் தடுக்கும் சேற்றுப்புண், டிரைகோபைட்டான் ரப்ரம் என்ற ஒருவகை காளான் (Trichophyton rubrum) அல்லது ஃபங்கஸ் இன்ஃபெக்ஷன் (Tinea pedis) மூலமாக ஏற்படுகிறது. சேற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்களின் கால் விரல் இடுக்குகளில் (Toe webs) தோல் உரிந்து காணப்படும். கொப்புளங்கள் உண்டாகி, செதில் வடிவில் இருக்கும். அரிப்பு அதிகமாக இருக்கும்.



சில நேரங்களில், வலியுடன் கூடிய எரிச்சல் ஏற்படும். விரல் இடுக்குகள் ஒருவித வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்த நோய் முக்கியமாக, நான்காவது, ஐந்தாவது விரல் இடுக்குகளில்தான் அதிகம் தெரிய வரும். அதிக அளவு வெப்பம் உள்ள இடங்கள் மற்றும் தண்ணீரில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், ஒரு நாளில் அதிக நேரம் ஷூ அணிபவர்கள், நீச்சல் குளத்தை அடிக்கடி உபயோகிப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் (Diabetes) மற்றும் க்ரோனிக் இம்யூன் டிஸ்ஆர்டர் (Chronic immune disorder) உள்ள நபர்களுக்கும் இப்புண் வர வாய்ப்பு உள்ளது. சேற்றுப்புண் வந்துள்ளது என்பதை, Koh prepararon என்ற வழிமுறை மூலம் கண்டு பிடிக்கலாம். இந்த முறையில், தோலில் உள்ள செதில்களை பரிசோதனை செய்து,சேற்றுப்புண் வருவதற்கு காரணமாக இருக்கும் காளான்களை மைக்ரோஸ்கோப் உதவியுடன் கண்டறியலாம். சேற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் கால்களை சுத்தமான நீரில் நன்றாக கழுவ வேண்டும்.

தொடர்ந்து 2 வாரங்களுக்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் ஆன்ட்டிஃபங்கல் வெளிப்பூச்சுகளை உபயோகிக்க வேண்டும். சுத்தமான காலுறைகளை அணிய வேண்டும். இந்த தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, Cellulists என்ற கிருமி மூலமாக, கால் வீக்கம் (Lymphangitis) வர வாய்ப்பு உள்ளது. இது மற்றவர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது. சேற்றுப்புண் என்ற இந்த சரும நோயை தடுப்பதற்கான வழிமுறைகளும் நம்மிடம்தான் உள்ளன. ‘கந்தை ஆனாலும் கசக்கி கட்டு... கூழானாலும் குளித்து குடி’ என்கிற நம் முன்னோர் அறிவுரையை பின்பற்றி, ஒவ்வொருவரும் சுகாதாரமாக இருந்தால், சேற்றுப்புண் வருவதை முற்றிலும் தடுக்கலாம்!’’