இக்கால திருமணங்களில்
அதிகளவு நாகரிக மோகம் இருந்தாலும் இன்னமும் முகூர்த்தத்துக்கு மட்டும் பாரம்பரிய நகை,
உடைளைத்தான் பலரும் விரும்புகிறார்கள்.
திருமணத்துக்கு முன்பே ஹேர் ஸ்டைல், மேக்கப், எல்லாம் பொருத்தமாக இருக்கிறதா என இன்றைய மணப்பெண்கள் ட்ரையல் பார்க்கிறார்கள். அதற்கு
முன்பு திருமணச் சடங்குகள் அனைத்துக்கும்
பொருந்தக்கூடிய நகைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.திருமணத்துக்கான நகைகள்
வாங்கும் போது கூடியவரையில் ஏற்கனவே தயாராக
உள்ள மாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்காமல், நகை வடிவமைப்பாளர்களிடம் திருமண உடைகளைக்
காட்டி, அதே டிசைன்
மற்றும் கலரில் செய்து வாங்கலாம்.
மணப்பெண்கள் நகைகளைத் தேர்வு செய்யும் போது, நெற்றிச்சுட்டி முதல் கொலுசு வரை எல்லாம் ஒரே கலரிலும்
டிசைனிலும் இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும். அகலமான தோள்பட்டை உள்ள
பெண்களுக்கு பெரிய பதக்கம் வைத்த கழுத்தணி அழகாக இருக்கும். ஒல்லியான உடல்வாகு
கொண்டவர்கள் பாரமான பெரிய பெரிய நகைகளைத் தவிர்த்து எடை குறைவானதும், கல் வைத்ததுமான நகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். நகைதானே, ரெடிமேடாக வாங்கும் பொருள்தானே என கடைசி நிமிட
அவசரம் வேண்டாம். கடைசி நிமிடத் தேர்வில் சரியான நிறமோ டிசைனோ அமையாது.
கூடிய வரையில்
திருமணத்துக்கான புடவைகளையும் நகைகளையும் பகல் நேர வெளிச்சத்தில் தேர்ந்தெடுப்பதே
சரியானது. டபுள் ஷேடு புடவைகள் இரவு வெளிச்சத்தில் வேறு மாதிரியும் பகல்
வெளிச்சத்தில் ஒரு மாதிரியாகவும் தெரியும். எனவே, புடவையையும் நகையையும் பகல் நேரத்தில் பார்த்து வாங்கினால் சரியாக அமையும்.
திருமணம் என்பது
சென்டிமென்ட்டுகள் நிறைந்த ஒரு சடங்கு என்பதால், மணப்பெண்களுக்கு அம்மாவின் நகை, பாட்டியின் நகை என பழங்காலத்து நகைகளில் சிலதையும் அணியச் சொல்வார்கள். அப்படி
பழைய நகைகளை அணிகிற போது, அத்துடன் புதிய
நகைகளையும் சேர்த்து அணிந்தால் இரண்டும்
வேறு வேறு கலர்களில் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பழமைக்கும்
புதுமைக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களுக்கு இரண்டும் கலந்த
ஃபியூஷன் நகைகள் இன்று நிறைய
வந்திருக்கின்றன. உதாரணத்துக்கு முன்பெல்லாம் காசு மாலை மட்டும்
அணிவார்கள். இன்று காசு வைத்த தோடு, வளையல் என மொத்த மணப்பெண் செட்டுமே
காசு மாடலில் கிடைக்கிறது.