வை - பையை முந்தும் லி-பை.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் லி-பை என்ற தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கின்றனர். வை-பை தொழில்நுட்பம் ரேடியோ அலைவரிசையை பயன்படுத்துகிறது. ஆனால் லி-பை உபயோகிப்பது நம் கண்ணுக்குத் தெரியும் எல்.இ.டி., போன்ற விளக்கு வெளிச்சம், அகச் சிவப்புக் கதிர் போன்றவற்றை பயன்படுத்துகிறது. ஒளியைப் பயன்படுத்துவதால் தகவல் பரிமாற்றம் மிகவும் வேகமாக நடக்கும். இணையத்தில் லி-பை மூலம் ஒரு நொடியில் 30 முழு படங்களையே டவுண்லோடு செய்யலாம். அதாவது, ஒரு வினாடிக்கு 224 ஜிகாபிட் வேகம்.

இந்த தொழில்நுட்பத்திற்கு லிபை என்று பெயரிட்டவர் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ். இன்னும் சில வருடங்களில் உலகெங்கும் 14 பில்லியன் மின் விளக்குகள் இருக்கும் என்கின்றனர். எனவே, 14 பில்லியன் லி-பை ஒளிபரப்பு மையங்கள் இணையப் பயனாளிகளுக்குக் கிடைக்கும்.

விரைவில் செயற்கை இலை! ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செயற்கை இலையை உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கின்றனர். சூரிய ஒளியை பச்சையம் மூலம் சக்தியாக மாற்றும் தன்மை தாவரங்களில் உள்ள இலைகளில் நடக்கும் விந்தை. இதை செயற்கை முறையில் உருவாக்கி, சூரிய ஒளியிலிருந்து திரவ எரிபொருளை உருவாக்கலாம் என்று ஹார்வர்டை சேர்ந்த விஞ்ஞானி டேனியல் நோசெராவின் குழுவினர் கண்டறிந்துள்ளனர். சூரிய ஒளி மற்றும் ஒரு பாக்டீரியா ஆகியவற்றின் உதவியுடன் இந்த செயற்கை இலை திரவ எரிபொருளை உருவாக்குகிறது. இதை பெருமளவில் தயாரிக்க முடிந்தால் பர்சனல் கம்ப்யூட்டர் போல.

பர்சனல் எரிபொருள் உற்பத்தி நிலையத்தை வீட்டின் கொல்லைப் புறத்தில் உருவாக்க முடியும். ஆனால், இந்த செயற்கை இலை, சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காது. யூ ட்யூபுக்கு 10 வயதாகிறது. 2005 பிப்ரவரி 14ல் மூன்று இளைஞர்களால் துவங்கப்பட்ட இந்த இணைய வீடியோ சேவை நிறுவனத்தை பிறகு கூகுள் வாங்கியது. எல்லாத் தரப்பினரையும் வீடியோ படைப்பாளிகளாக மாற்றியது யூ ட்யூப். பல திறமையாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது.

சாதாரணமானவர்களையும் ஸ்டார்களாக மாற்றியது. இப்போது ஒரு பில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறது. கான் அகாடமி போன்ற பல புரட்சிகரமான கல்வி அமைப்புகளுக்கு ஊக்கம் தந்ததன் மூலம் அறிவு விருத்திக்கும் யூ ட்யூப் வித்திட்டது