உருளைக்கிழங்கை பற்றிய சில தகவல்கள்.

‘‘எடைக் குறைப்பைப் பொறுத்தவரை, உருளைக்கிழங்கை எல்லோரும் மாவுச்சத்து வரிசயில்  தான் வச்சுப் பார்ப்பார்கள். சரியான முறையில ருமாட்டிசம் பிரச்னைக்கு உருளைக்கிழங்கு மிகச்சிறந்த மருந்தா பயன்படுத்தப்பட்டிருக்கு.  ஜெர்மனியில சாதத்துக்குப் பதிலா வேக வச்சு மசிச்ச உருளைக்கிழங்கை சாப்பிடற பழக்கம் இருக்கு...’’ - உருளைக் கிழங்கின்  உன்னதங்களைப் பற்றிப் பேசுகிற ஷைனி என்பவர் அதன் பாதகங்களையும் பகிர்கிறார்.

‘‘கார்போஹைட்ரேட் அதிகமுள்ளதுங்கிறதாலதான் எடை குறைக்க நினைக்கிறவர்களால் உருளைக்கிழங்கு தவிர்க்கப்படுகிறது.
ஆனால், இதுல உள்ளது  காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட். அதனால அளவோட சாப்பிடும் போது, அது அப்படியொண்ணும் எடையை அதிகரிச்சிடாது. மனித உடல் என்ற வண்டி  தடையின்றி ஓட, கார்போ ஹைட்ரேட் என்ற எரிபொருள் தான் முக்கியம். அந்த கார்போஹைட்ரேட் முழுக்கவே தவிர்க்கப்படும் போது, பெட்ரோல்  இல்லாத வண்டி மாதிரி இயங்க மறுக்கும் உடம்பு.  தசைகள் பலமிழக்கும். எடையைக் கட்டுப்பாட்டுல வச்சிருக்கணும்னு நினைக்கிறவர்கள், சரியான அளவு கார்போஹைட்ரேட் உணவை, சரியான முறையில சமைத்து சாப்பிடுவது முக்கியமே தவிர, அதை அறவே தவிர்க்கிறது சரியில்லை.

உருளைக்கிழங்குல உள்ள கார்போஹைட்ரேட், ஒரு நாளைக்குத் தேவைப்படும் கார்போஹைட்ரேட் தேவையில் பெரியவங்களுக்கு 50 சதவிகிதத்தையும் குழந்தைகளுக்கு  80  சதவிகிதத்தையும்,  கொடுக்கக்கூடியது.உருளைக்கிழங்கில் உள்ள விட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும். அதனால் தான் அக்காலத்தில் உடம்பு சரியில்லாத நேரம் நேரம் அதைக் குணப்படுத்த பச்சை உருளைக்கிழங்கை   பயன்படுத்தி உள்ளனர்.உருளைக்கிழங்குகில் 19.7 மி.கி. வைட்டமின் சி கிடைக்கும். கிழங்கு வாழைப்பழத்தைவிட அதிக பொட்டாசியம் சத்து கொண்டது.  இது பக்கவாதம் வருவதை தடுத்து, அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். கொழுப்போ, கொலஸ்ட்ராலோ கிடையாது. சோடியம்  அளவும்குறைவு என்பதால் ஆரோக்கியமானது.

உருளைக்கிழங்கின் தோலில் இயற்கையான நார்ச்சத்து உண்டு. உருளைக்கிழங்கு தோலில் உள்ள கெமிக்கல், செல்கள்ல பாக்டீரியா தொற்றுவதைத்  தவிர்க்கும். சுருக்கமா கூறினால், உருளைக்கிழங்கு நல்ல உணவு தான்.  ஆனால் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸாகவா, ரோஸ்ட்டாகவா, சிப்ஸாகவா... அது எப்படி  நம்ம வயிற்றுக்கு  செல்கிறது என்பதை பொறுத்து தான் அதுகெட்டதா அல்லது நல்லதா என தீர்மானிக்கப்படுகிறது.

ஓட்டப் பந்தய வீரர்களைக் கவனிச்சீங்கன்னா, அவங்க பொங்கல், ஆலு பரோட்டா அல்லது மசால் தோசை சாப்பிட்டு, சக்தி ஏத்திக்கிறது தெரியும்.  காரணம், அதுல உள்ள கார்போஹைட்ரேட். சிறுநீரகங்கள் தீவிரமா பழுதடைஞ்ச நிலையில இருக்கிறவங்க மட்டும் உருளைக்கிழங்கைத் தவிர்க்கிறது  நல்லது. அதுல உள்ள பொட்டாசியம் சத்தை அவங்களால வெளியேற்ற முடியாதுங்கிறதுதான் காரணம். நீரிழிவு பாதிச்சவங்களுக்கும், சாதாரண  மனிதர்களுக்குத் தேவைப்படற அதே கார்போஹைட்ரேட் தேவைப்படும்.

நீரிழிவு வந்தா உருளைக்கிழங்கை அறவே தவிர்க்கணும்னு அவசியமில்லை. அளவும், சமைக்கிற விதமும்தான் கவனிக்கப்படணும்.
எடைக் குறைப்பு முயற்சியில உள்ளவங்களுக்கும் இதே விதிதான். சாதம், பிரெட், சப்பாத்தினு எல்லாத்தையும் தவிர்த்துட்டு, ஒரு சின்ன கப் உருளைக்  கிழங்கு சப்ஜியும், அதோட சேர்த்து நார்ச்சத்து நிறைஞ்ச ஏதாவது ஒரு காயும், புரதம் நிறைஞ்ச ஒரு உணவையும் எடுத்துக்க்கலாம். இப்படி சாப்பிட்டா  உருளைக்கிழங்கு சாப்பிட்டாலும், எடையைக் கட்டுப்பாட்டுல வச்சுக்கலாம்...’’ உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு உற்சாக சேதி  சொல்லி முடிக்கிறார்  ஷைனி.

வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை.

முளைவிட்டிருந்தால் வாங்கக்கூடாது.
உறுதியாக, கெட்டியாக, பளீரென இருக்க வேண்டும்.
பச்சைத் திட்டுகளோ கரும்புள்ளிகளோ,  இருக்கக் கூடாது.
பசுமை படர்ந்த கிழங்கில் நச்சுத் தன்மை இருக்கலாம்.
கெட்ட வாடை வீசாமலிருக்க வேண்டும்.
நறுக்கியதும் உள்ளே குழியோ கருமைத் திட்டோ,  இருந்தால் உபயோகிக்கக் கூடாது.

பாதுகாப்பாக வைக்கும் முறை.

உருளைக்கிழங்கை குளிச்சாதன பெட்டியிலோ பிளாஸ்டிக் பைகளிலோ,   வைக்கக்கூடாது. பாத்திரம் தேய்க்கிற சிங்கின் அடிப்பகுதியிலும் உருளைக்கிழங்குகளை  போட்டு வைக்கக்கூடாது. அந்த ஈரப்பதத்தில் கிழங்கு சீக்கிரமே கெட்டுவிடும். அதே போல உருளைக்கிழங்கை வாங்கியதும், அதைக் கழுவாமல்  அப்படியே தான் வைக்க வேண்டும். கழுவி வைத்தாலும் கெட்டுப் போகும். அதிக வெப்பமில்லாத காற்றோட்டமான, இருட்டான, இடத்தில்  வைக்கலாம்.