ஓவிய சீக்ரெட்
* மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த புகழ் பெற்ற ‘இறுதித் தீர்ப்பு’ என்ற ஓவியத்தில், போப் நான்காம் பாலின் உருவம் எல்லோரையும் பயமுறுத்தும் விதத்தில் ஆடையின்றி இருந்தது. இதனால் டானியல்டி வோல்ட்ரோ என்ற இன்னொரு ஓவியர் மூலம் போப்பிற்கு ஆடைகள் அணிவித்தார்கள்.
* 1902ம் ஆண்டு பாரிஸில் ஓர் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதில் வைக்கப்பட்டிருந்த ‘தூங்கச் செல்லும் சூரியன்’ என்னும் தலைப்பிலான மாடர்ன் ஆர்ட் எல்லோரது கவனத்தையும் கவர்ந்தது. அதற்குப் பரிசு கிடைத்தது. ஆனால் அதை வரைந்தவர் யார் என்பதை மட்டும் சொல்லவில்லை. உண்மையில் அந்த ஓவியத்தை வரைந்தது ஒரு கழுதை. ஆம், கழுதையின் வாலில் பிரஷ்ஷைக் கட்டி விட்டுவிட அது வாலை ஆட்டும்போதெல்லாம் உருவான ஓவியம் இது.
* பிரெஞ்சு ஓவியரான அன்னி லூயிஸ் கிரோடெட் என்பவர் தலைத் தொப்பியை சுற்றி, 40 மெழுகுவர்த்திகள் எரிய வைப்பார். அந்த வெளிச்சத்தில் மட்டுமே ஓவியம் வரைவார். எப்பொழுதும் பகலில் ஓவியம் வரையமாட்டார். ஓவியம் வரைந்து முடிக்க செலவாகும் மெழுகுவர்த்திகளின் எண்ணிக்கைக்குத் தக்கபடி ஓவியத்திற்கான விலையையும் முடிவு செய்வார்.
* மோனாலிசா ஓவியம் இன்றும் அழியாப் புன்னகையுடன் நீடித்து உயிர் வாழக் காரணம் என்ன என்பது அண்மையில் தெரிய வந்துள்ளது. மோனாலிசாவின் உருவப் படங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக 30 அடுக்குகளாக வரையப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஸ்கெட்ச் செய்து வரைந்த பிறகே ஓவியத்தை வண்ணம் பூசி நிறைவு செய்துள்ளார் டாவின்சி.
கடுப்பேற்றும் காகங்கள்!
இந்தியக் காகங்கள் வெளிநாடு களுக்குச் சென்று படும் பாடு மட்டுமல்ல, படுத்தும் பாடும் சொல்லி மாளாது என்கிறார்கள்.
1977ம் ஆண்டு சீஷெல்ஸ் நாட்டிற்குச் சென்ற இந்தியக் கப்பலொன்றின் மூலமாக ஐந்து காகங்கள் அங்கே போய்ச் சேர்ந்தன. அவைகளில் இரண்டை சுட்டுத் தள்ளிவிட்டு மூன்றை மட்டும் இனப் பெருக்கத்திற்காக விட்டுவிட்டார்கள். தற்போது அங்குள்ள காகங்களின் எண்ணிக்கை என்னவோ ஐம்பதுக்கும் குறைவுதான். ஆனால் அவற்றின் தொல்லையை தாங்க முடியவில்லையாம். ‘‘இவற்றால் உள்நாட்டுப் பறவைகள் அழிகின்றன. காக்கைகளால் தீவுகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு விட்டது’’ என குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்கள் மக்கள்.
கென்யாவிலும் காக்கைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாம். கண்ட கண்ட இடங்களில் எச்சமிடுவதோடு, அந்த நாட்டின் மிக அபூர்வமான சின்னஞ்சிறு பறவைகளையும் அவற்றின் கூடுகளையும் இவை அழித்து விடுகின்றனவாம். பூனைகளைத் தாக்கி, அதன் கண்களை குருடாக்கி விடுகின்றனவாம் இந்த காகங்கள். சில சமயங்களில் மனிதர்களையும் தலையில் அடிக்கின்றன என புலம்புகிறார்கள் கென்யாவாசிகள்!
ஆஸ்திரேலியாவில் அடிக்கடி இந்தியக் கப்பல்கள் மூலம் வந்திறங்கும் இந்த வேண்டாத விருந்தாளிகளைக் கண்டவுடன் சுட்டுத் தள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஸான்ஸிபாரில் இவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல ஆண்டுகளாக எக்கச்சக்கமான பணத்தை செலவழித்து, இப்போது செலவுத் தொகை கட்டுக்கடங்காமல் போய்விடவே ‘எப்படியோ தொலையட்டும்’ என்று கையைக் கழுவிவிட்டது அரசாங்கம்.
இதுபோல பல நாடுகள் கடுப்பாகி இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் காகங்களுக்கு ராஜமரியாதை. காகங்களை தங்களின் முன்னோர்கள் என்று இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். விரத காலங்களில் இவைகளுக்கு சாப்பாடு வைத்து விட்டுத்தான் சாப்பிடுகிறார்கள்!
சீனியர்களின் சாதனை
‘முதுமை என்பது உடலுக்குத்தான். உள்ளத்திற்கு அல்ல’ என்று உரக்கச் சொல்கிறது இந்த சாதனைப் பட்டியல்.
* கான்ட் தனது எழுபது வயதிற்குப் பின் மிகச் சிறந்த தத்துவ நூல்களை எழுதினார்.
* ஆண்ட்ரூ மெலன் 82 வயதில் மிகச் சிறந்த நிதி நிறுவனராக விளங்கினார்.
* வான்ட்டன் பில்ட் தளராத சுறுசுறுப்புடன் 70 வயதிற்குப் பின்னும் இருப்புப் பாதை அமைப்பாளராக விளங்கினார்.
* வால்டர் டாம்ராஸ்க் தனது இசை ஞானத்தால் 75 வயதிலும் மிகச் சிறந்த இசைக் குழுக்களை நடத்தினார்.
* மோனட் என்னும் பிரான்ஸ் நாட்டுக் கலைஞர் தனது 86வது வயதில் மிகச் சிறந்த வண்ண ஓவியங்களைத் தீட்டினார்.
* வான் ஹம்போல்ட் தனது உலக சாதனையை 76 வயதில் தொடங்கி 90 வயது வரை நிகழ்த்தினார்.
* கதே தனது 80வது வயதில் தலைசிறந்த இலக்கியம் படைத்தார்.
* திதியன் தனது ‘லெப்னடோ போர்’ என்ற நவீனத்தைத் தனது 98வது வயதில் படைத்தார்.