"கொசுவர்த்திச் சுருள் பாவித்தால் நுரையீரல் புற்றுநோய் வரும்" ஆய்வு முடிவு.

வீட்டில் கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையை மூடிய அறைக்குள் இருந்து சுவாசிப்பது, 100 சிகரெட்டுகளைப் பிடிப்பதற்கு சமம் என்று மார்பக ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்.

இந்திய ஒவ்வாமை கல்லூரியில் நடைபெற்ற 48வது தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு உட்புற மாசு மற்றும் அஸ்துமா குறித்து பேசிய சந்தீப் சால்வி, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையானது நுரையீரல்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

புகையில்லாத கொசுவர்த்தி சுருள்களிலும் அதிக அளவில் கார்பன் மோனாக்ஸ்டு கலக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கொசுவர்த்தி சுருளை பயன்படுத்தும் போது அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பது அபாயத்தை அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.