மர்மமாக உருவாகும் பயிர் வட்டங்கள்.

பயிர் வட்டங்கள் ஒரு சுவாரசியமான மர்மங்கள். விளைந்திருக்கும் பயிரில் ஒரே இரவில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இதுபோன்ற உருவங்களை உருவாக்கிச் செல்வதாய் கதைகள் நீள்கின்றன. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த பயிர் வட்டங்கள் தோன்றியிருக்கும் போதும் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகம் பதியப்பட்டிருப்பது இங்கிலாந்தில்தான்.
பெரும்பாலான உருவங்கள் ஒரே இரவில் மனிதர்கள் உருவாக்க சாத்தியமேயில்லாத முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் மர்மத்தை மேலும் கூட்டுகிறது.

இரவுப்பொழுதில் வெளிச்சம் இல்லாமல் சுற்றியிருக்கும் பயிருக்கு எந்தவொரு சிறு சேதமும் இல்லாமல் எந்தவொரு வாகனமோ, மனிதக்காலடியோ, இல்லை இயந்திரத்தின் தடயமோ இல்லாமல் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாக்கப்படுவது மர்மத்திலும் மர்மமே.
அதுவும் சில ஆராய்ச்சிகளில் இந்த பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்ட இடத்தின் மண் மட்டும் பாறைப்படிவம் போல மாறியிருப்பது மர்மத்தின் உச்சம். ஏனென்றால் ஒரு சாதாரண மண் இறுகிப் பாறைபடிவம் போல மாறவேண்டுமென்றால் அதற்கு இயற்கையாய் 1000 ஆண்டுகளுக்குமேல் தேவைப்படும். இப்படி ஒரேயிரவில் பாறைப்படிவம் போல மாறவேண்டுமானால் கிட்டத்தட்ட 8000 டிகிரி வெப்பத்தில் மண்ணை சூடுபடுத்தவேண்டும்.

அவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படும் பட்சத்தில் அந்த இடமே சின்ன புல் பூண்டு கூட இல்லாமல் பஸ்பமாகிவிடும். மேலும் இதேப்போன்ற பயிர் வட்டங்களை மனிதர்களைக்கொண்டு உருவாக்க நடந்த ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு சாதாரண உருவத்தை பகல் வெளிச்சத்தில் உருவாக்கவே 5நாட்களுக்கும் மேல் ஆகியிருக்கிறது. அதைவிட முக்கிய விஷயம் மனிதர்களைக்கொண்டு இந்த முயற்சியைச் செய்தபோது பயிர்கள் நிறைய உடைபட்டிருக்கின்றன. மனிதர்களின் சேற்றுக்காலடித்தடங்கள் பயிர்களில் பதிந்திருக்கின்றன. ஆனால் உண்மையான பயிர்வட்டங்களில் பயிர்கள் மடக்கப்பட்டிருந்தாலும், வளைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை ஒரு பயிர்கூட சேதப்பட்டிருக்கவில்லை என்பது கூடுதல் ஆச்சர்யம்.

இந்தப் பயிர் வட்டங்கள் இரவு நேரத்தில் வானத்திலிருந்து வரும் ஒரு ஒளிக்கற்றையால் உருவாக்கப்படுவதாகவும், வேற்றுக்கிரக வாசிகளின் வாகனம் இறங்கிச் சென்ற தடையங்களே இந்தப்பயிர் வட்டங்கள் என்றும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் செல்லும் மிருகங்கள் மிரண்டு ஓடுவதாகவும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் கடிகாரம் வேகமாகவும், மெதுவாகவும் மாறி மாறிச்சுற்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டங்களுக்குள் நுழையும்போது தலைச்சுற்றல் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டத்துக்குள் நுழைந்ததும் தங்கள் உடம்பிலிருந்த நோய்கள் சரியானதாகவும் வித விதமான மர்மக்கதைகள் நமக்கு மயக்கத்தையே வர வைக்கின்றன.

எனினும் வெறும் காகிதத்திலேயே வரையச் சிரமப்படும் பல டிசைன்கள், பயிர்களில் சேதமில்லாமல் உருவாகியிருப்பது மர்மமான ஆச்சர்யம்தான்.