மேலைநாடுகளில் உள்ளது போல வீடு மற்றும் அலுவலகங்களுக்குள் செடிகளை வளர்ப்பதே இப்போது கார்டன்
நாகரிகமாக மாறி வருகிறது. இது வீடு மற்றும் அலுவலகங்களில் இயற்கைச் சூழலை
உருவாக்குவதோடு அழகும் சேர்க்கிறது. அறைகளிலுள்ள கரிம வாயுவை எடுத்துக் கொண்டு
நிறைய பிராண வாயுவை வெளிவிடுகிறது.
இந்த உண்மையை ‘நாசா’ அமைப்பும் ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ளனர். நம்மை வியப்புறச் செய்யும்
பிரபலமான அழகுச்செடிகள் சிலவற்றை அறிமுகப்படுத்துகிறார் தோட்டக்கலை நிபுணர்
பா.வின்சென்ட். இவற்றின் விலை சில நூறு ரூபாய்களிலிருந்து பல ஆயிரம் வரை!
பல நிறம் கொண்ட
டைபன் பாக்கியா!
இந்த அழகுச் செடி
வீட்டுக்குள் வைக்கும் பிரபலமான தாவரம்.
விஷத்தன்மை கொண்டது. இதன் சாறு வாய்ப் பகுதியில் படும்போது உணர்வின்றி மரத்துப்
போய்விடும். அதனால் இதனை டம்ப் கேன் (Dumb Cane) என்றும் அழைப்பர். பலவித நிறங்கள் கொண்ட வகைகள்
இருப்பதால் இக்குறையை, வளர்ப்பவர்கள்
பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக
தவிர்க்கப்பட வேண்டிய தாவரம் இது. மிகக்குறைந்த ஒளியிலும் நன்கு வளரும். பச்சை நிற
இலையில் வெண்மைச் சிதறல்கள் இருக்கும். தண்டுகளை சிறிய துண்டுகளாக வெட்டி
படுக்கைக் கிடையாகப் போட்டு, குறைந்த அளவில்
மண் இட்டு மூடி, புதிய நாற்றுகளை உருவாக்கலாம்.
பளபள ஜாமியா!
சமீப காலமாகவே
இத்தாவரம் பிரபல மாகி வருகிறது. Zamiculcus Zamifolia என்ற தாவரவியல் பெயர் இருப்பதால் இதனை இஸட்
இஸட் (ZZ) செடி என்றும்
அழைப்பர். ஐ.டி. நிறுவனங்கள் வந்த பின் இதன் தேவை அதிகமாகி உள்ளது. பராமரிப்பு
அதிகம் தேவையில்லை. வளர்க்கும் மண் நல்ல காற்றோட்டமுள்ளதாகவும் ஈரத்தை தக்க
வைத்துக் கொள்ளும் தன்மையுடன் இருந்தால் நல்ல பளபளப்புடன் அதிக ஆண்டுகள்
இருக்கும். தென்னைநார் கழிவுகள் உபயோகிப்பது நன்மை அளிக்கும். நீர் அதிகம்
இருந்தால் அடிப்பகுதி அழுகிவிடும். அதனால், நீர் ஊற்றுவதில் கவனம் தேவை. மெதுவாக வளரும்
தன்மையுள்ள காரணத்தால் உற்பத்தி சற்று கடினம்... விலையும் சற்று அதிகம்.
அடிப்பகுதி கிழங்கிலிருந்து புதிய நாற்றுகளை உருவாக்கலாம். பூக்களும் தோன்றும்
என்றாலும், அவை அதிகம் கவனம்
பெறுவதில்லை.
கண்ணைக் கவரும்
மெக்சிகன் பிரெட் ஃபுரூட்!
‘ஸ்விஸ் சீஸ்’
அல்லது ‘ஹரிக்கேன் பிளான்ட்’ என்றும் அழைக்கப்படும் இந்தத் தாவரம் கொடி
வகையைச் சேர்ந்தது. வீட்டுக்குள் வைப்பதற்கு மிகவும் ஏற்றது. இலைகள் சற்று கடினமாக
கரும்பச்சை நிறத்துடன் பளபளப்பாகக் காணப்படும். இலைகளின் ஓரங்களிலிருந்து
உள்நோக்கி வெட்டி விட்டாற்போல இருக்கும். அதனிடையே துவாரங்களும் தோன்றி
பார்ப்பவர்களின் கவனத்தை எளிதாகக் கவரும். ஆரம்பத்தில் தோன்றிய இலைகள் 2 ஆண்டுகள் வரை கூட இருக்கும். நன்கு
பராமரித்தால் 20 ஆண்டுகள் வரை கூட
வைத்துக் கொள்ளலாம். மிக மெதுவாக வளரும் தன்மையுள்ளதால் உற்பத்தி சற்று கடினம்
என்பதுடன், விலையும் சற்று
அதிகம். ஆரோக்கியமான இலைகள் மரங்களின் கீழ் சுமார் ஒரு மீட்டர் நீள அகலங்களில்
இருக்கும். வீட்டுக்குள் முடிந்த அளவு மிக அகலமான தொட்டிகளில் வைப்பது நல்லது.