எவ்வயதினருக்கும் தைராய்டு பிரச்சினை வரலாம்.

தைராய்டு சுரப்பி எங்குள்ளது அதன் பணிகள் என்ன?

கழுத்துப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளுள் ஒன்று. இது அதிகம் அல்லது குறைந்து வேலை செய்தால் சிக்கல்தான். இதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்றஹார்மோன் நீர் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது.

தைராய்டு நோய்க்கு என்ன காரணம்?

நிறைய காரணங்கள் இருக்கிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதுவும் நம்மைத் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் உள்ளன.
எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வதுபோல இதையும் பரிசோதித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இளம் வயதில் புற்றுநோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தால் நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். குறிப்பாக நம் உணவில் அயோடின் குறைவைக்கூட ஒரு காரணமாகச் சொல்லலாம்.

காரணமில்லாமல் கோபம் வருவது ஏன் டாக்டர்? அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு?

ஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.

தைராய்டு பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே?

தைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும். சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, பரம்பரையாக வருவது, சிலவகை தொற்று நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும் பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.

தைராய்டு சுரப்பி குறைபாடுகளினால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான குறைபாடுகள் ஏற்படலாம்.

1. குறைவாக தைராய்டு சுரப்பது. இதற்கு ஹைபோ தைராய்டு என்று பெயர்.
2. அதிகமாக தைராய்டு சுரப்பது இதற்கு ஹைபர் தைராய்டு என்று பெயர்.

ஹைபோ தைராய்டு காரணமாக காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். முடி கொட்டுதல், பசியின்மை, எடை அதிகரித்தல், கர்ப்பம் தரிக்க முடியாமை, உடலில் அசாத்தியமான சோர்வு, அசதி, மந்த நிலை போன்றவை இருக்கும்.

ஹைபர் தைராய்டு காரணமாக படபடப்பு, நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். கை காலில் நடுக்கம், டயரியா, லூஸ் மோஷன், மாதவிலக்கு தொந்தரவு, கால் வீக்கம், ஞாபக சக்தி குறைதல், கடுமையான பசி, கோபம் வருதல், முடி கொட்டுதல், கர்ப்பம் தரிக்க முடியாமை, அளவிற்கு அதிகமான உடம்பு வலி போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.

உணவில் உள்ள உப்பிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் என்ன தொடர்பு?

பொதுவாக நம் நாட்டில் மலை அடிவாரம், கடல் இல்லாத பகுதிகளில் உள்ள தண்ணீரில் உணவில் உள்ள உப்பில் அயோடைஸ்டு குறைவாகத்தான் இருக்கும். எனவே இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அதிக அளவில் தைராய்டு பாதிப்பு வர வாய்ப்புண்டு. இதனை கருத்தில் கொண்டுதான் இந்திய அரசாங்கம் எல்லா இடங்களிலும் அயோடைஸ்டு கலந்த உப்பு விநியோகிக்க ஏற்பாடு செய்தது. இன்றைக்கு கடைகளில் விற்கப்படுகின்ற அனைத்து உப்புகளும் அயோடைஸ்டு கலந்த உப்புதான்.

தைராய்டு பாதிப்பிற்கு என்ன மாதிரியான சிகிச்சைகளை செய்கிறீர்கள்?

குறை தைராய்டு (ஹைபோ) பிரச்சினைக்கு பரிசோதனை முடிவினை பார்த்து மருந்து, மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். எந்த நிலையிலும் இதற்கு இதுதான் சிகிச்சை. அதிக தைராய்டு (ஹைபர்) பிரச்சினைக்கு மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.

1. மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது, 2. அணுக்கதிர் தன்மை கொண்ட சொட்டு மருந்து, 3. அறுவை சிகிச்சை. தைராய்டு அதிகமாக சுரக்கின்ற நோயாளிக்கு மருந்து மாத்திரையே நிரந்தரமான தீர்வாக அமையாது. 6 முதல் 12 மாதம் வரை மருந்து சாப்பிட்டு பார்த்து குணமாகவில்லை என்றால் அணுத்தன்மை உள்ள சொட்டு மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ செய்து குணப்படுத்தி விடலாம்.

அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சை பற்றி சொல்லுங்களேன்?

இன்று வேகமாக வளர்ந்து வரும் அணுக்கதிர் மருத்துவத்தில் இத்தகைய தைராய்டு பாதிப்புகளை கண்டுபிடிப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் ஐசோடோப் எனப்படும் அணுக்கதிர் மருந்து உபயோகிக்கப்படுகிறது. கதிர் இயக்கத் தன்மை உடைய இந்த மருந்தை நோயாளிக்கு வாய் வழியாகவோ அல்லது ஊசி வழியாகவோ செலுத்தப்படும். உடலில் எல்லா உறுப்புகளிலும் ஏற்படும் புற்றுநோய்களையும் குறிப்பாக மூளை, கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களை கண்டுபிடிக்க முடியும். இந்த மருந்து பாபா அணுக்கதிர் ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப் பட்டு இந்தியா முழுதும் அனுப்பப் படுகிறது. கழுத்தில் ஏதேனும் கட்டி இருந்தால் குழந்தைகள் படிப்பிலும், வளர்ச்சியிலும் மந்தமாக காணப் பட்டால், சுரப்பிகளில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

இந்த அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சையினை பெற்ற நோயாளி அன்றைக்கே வீட்டுக்குப் போய்விடலாம். மருத்துவமனையில் தங்க வேண்டாம். ரத்த இழப்பும் இருக்காது. நோகாமல் தைராய்டு நோயை அகற்றுகின்ற அற்புதமான அதிநவீன மருத்துவம் இது.

சில குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு தைராய்டு பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே?

பெரும்பாலும் குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற பாதிப்புதான் வரும். பொதுவாக தாயின் வயிற்றில் கரு உண்டானதிலிருந்து பிறந்து 3 வயது வரைக்கும் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாகவே இருக்கும்.

இந்த மூளை வளர்ச்சி நிலையில் குறை தைராய்டு (ஹைபோ) இருந்து அதனை கண்டுகொள்ளாமல் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் அறிவுத்திறன், அறிவு நுட்பம் (ஐக்யூ) குறைந்து விடும்.

படிப்பு, நடப்பது, பேசுவது, எழுதுவது, நடை, உடை, பாவனை அனைத்திலும் அந்தக் குழந்தை மிக மிக மந்தமாகிவிடும். இதுபோன்று ஒரு குழந்தை மந்த நிலையில் இருந்தால் ஒரு தைராய்டு ஹார்மோன் பிளட் டெஸ்டை செய்தால் தெரிந்து விடும். அப்போதே அலட்சியப்படுத்தாமல் குழந்தைக்குச் கிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்தி மந்த நிலையை போக்கி விடலாம்.

தைராய்டில் புற்றுநோய் வருமா?

தைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.

1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.
2. குரலில் மாற்றம் ஏற்படும்.
3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும்.
4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.

பெரும்பான்மையான தைராய்டு புற்று நோயை ஆபரேஷனுக்குப் பிறகு அணுக்கதிர் சொட்டு மருந்தினை கொடுத்தே குணப்படுத்தி விடலாம்.