தனியான பேஸ்புக் மெசஞ்சர்.

பேஸ்புக் தன் இணைய தளத்தில், பதிவுகளுடனேயே, தன் சந்தாதாரர்கள் ஒருவருக்கொருவர் செய்திகள், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதியைத் தந்து வருகிறது. ஆனால், சில மாதங்களாகவே, மொபைல் சாதனங்களில் இந்த வசதியைத் தனியே அமைக்க இருப்பதாக அறிவித்து வந்தது. தனியே மெசஞ்சர் என்று ஒரு அப்ளிகேஷனையும் தந்தது. இப்போது தன் வாடிக்கையாளர்களை, மொபைல் சாதனங்களில், பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனைத் தனியே தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டு பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வாரத்துடன், பேஸ்புக் தளத்தில் இந்த வசதி தருவதனை நிறுத்தப் போவதாகவும் அறிவித்தது.

இதில் ஒரு வசதி என்னவென்றால், இணைய இணைப்பு இல்லை என்றாலும், மற்ற இன்ஸ்டண்ட் மெசஞ்சர்களைப் போல முந்தைய செய்திகளைப் படிக்கலாம். தேவை இல்லை என்றால் அழித்துக் கொள்ளலாம்.
தான் தரும் மெசஞ்சர் வசதியினை ஒவ்வொரு மாதமும் 20 கோடி பேருக்கும் மேலாகப் பயன்படுத்துவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. மெசஞ்சர் அப்ளிகேஷன் மூலம் தகவல்களை அனுப்புவது, அதன் முதன்மைத் தளம் வழியே அனுப்புவதனைக் காட்டிலும் 20% கூடுதல் வேகத்துடன் நடைபெறுவதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும், லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள், வழக்கம் போல அதன் வழியே இணைக்கப்பட்டுள்ள மெசஞ்சரைப் பயன்படுத்தலாம். இந்த மாற்றம் மொபைல் சாதனங்களுக்கு மட்டுமே. குறிப்பாக ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்.