அனேகன் காதல் படமா? ஆக்ஷன் படமா? இயக்குநர் விளக்கம்!

அயன், மாற்றான், தற்போது அனேகன் என்று தமிழ் அகராதியிலிருந்து தேடிப்பிடித்து புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை தன் படத்துக்கு தலைப்பாக வைத்து வருகிறார் கே.வி.ஆனந்த். சூர்யாவை வைத்து இயக்கிய மாற்றான் படம் படு தோல்வியடைந்தநிலையில் தற்போது தனஷை வைத்து அனேகன் படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்தப் படத்தில் 4 வித்தியாசமான கெட்அப்களில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மும்பை வரவு அமைரா தஸ்தர் நடிக்கிறார்.

முக்கிய வேடமொன்றில் அதாவது வில்லன் வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார். அனேகன் படத்தின் ஒளிப்பதிவை ஓம்பிராகஷ் கவனிக்க, இசையமைக்கிறார் கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்.


அனேகன் என்றால் என்ன அர்த்தம்? 

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க என்று எழுதியிருக்கிறார். அதாவது இறைவன் பலவாக இருக்கிறான்... ஒருவன் அல்ல என்பதுதான் அவர் பயன்படுத்திய அனேகன் என்ற வார்த்தைக்கு அர்த்தமாம். இந்த அர்த்தத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே தன் படத்திற்கு அனேகன் என்ற தலைப்பை வைத்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.


சரி..அனேகன் ஆக்ஷன் படமா?

உண்மையைச் சொல்லப்போனால்... அனேகன் ஒரு காதல் படம். காதல் ஒருத்தனை நிச்சயமா மாத்தும். அப்படி ஒருக்காலும் மாத்த முடியாதவன்னு யாராவது இருக்க முடியுமா? எனக்கு அப்படித் தோணலை. ஒரு அருமையான லவ் இதுல இருக்கு. என்னோட படத்துல லாஜிக்கை எந்த விதத்திலும் மீறமாட்டேன். எவ்வளவு கமர்ஷியலா இருந்தாலும் ஏதாவது காரணத்தோடதான் காட்சிகள் நகரும். அப்படிதான் இந்த படமும் ஒரு காதல் கலந்த ஆக்ஷன் படமா வந்திருக்கு என்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.