அஜித்தின் 55வது பட டைட்டில் என்னை அறிந்தால்...

ஒரு வாரம் முன்னர் வரை சமூக வலைத்தளங்களில் பலரும் பேசிய விஷயமாக கத்தி படம்தான் இருந்து வந்தது. கத்தி வருமா, வராதா என்பதில் ஆரம்பித்த விஷயம், கத்தி படத்தின் கலெக்ஷன் எவ்வளவு என்பது என்று நேற்று வரை விவாதிக்கப்பபட்டு வந்தது. ஆனால், நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அந்த விவாதங்கள் அப்படியே என்னை அறிந்தால் படத்திற்கு திரும்பிவிட்டது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வரும் படத்தின் டைட்டில் என்னை அறிந்தால் என்பது 30ம் தேதி 12 மணி ஆனதும் அறிவிக்கப்பட்டது.படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிவிட்டரில் என்னை அறிந்தால் தலைப்பு டிரெண்டிங்கில் வந்து விட்டது.
அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே இந்திய அளவிலும், பின்னர் உலக அளவிலும் என்னை அறிந்தால் படப் பெயரை அஜித் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் கமெண்ட்டுகளை அள்ளி வழங்கி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். படங்களின் விளம்பர யுக்தியில் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன. அதில் படத்தின் தலைப்பையே இந்த அளவிற்கு பேச வைத்திருப்பது இதுவே முதல் முறை.
சென்னை டிரெண்டிங்கில் “என்னை அறிந்தால், அஜித், தல 55, தல, கௌதம் மேனன், ஆப்ட், கௌதம், அறிந்தால், மேனன், என்னை, அறிந்தால், மேக் தி வே ஃபார் தல 55 டைட்டில் வித் எப்எல்” ஆகிய வார்த்தைகள் தற்போது வரை முன்னணியில் உள்ளன. இந்திய டிரெண்டிங்கில் “என்னை அறிந்தால், மேக் தி வே ஃபார் தல 55 டைட்டில் வித் எப்எல், கௌதம்” ஆகிய வார்த்தைகள் முன்னணியில் உள்ளன. இதுவரை எந்த ஒரு படத்திற்கும் கிடைத்திருக்காத வரவேற்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.