தெலுங்கு 'பவர்' படம் ரெஜினாவை உயர்த்துமா...?

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையரை தொடர்ந்து அதே கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க அழைப்பார்கள். அவர்களை தப்பித் தவறிக் கூட நாயகியாக உயர்த்திவிட மாட்டார்கள்.

ஆண்டாண்டு காலமாக இதே நிலைதான் இருந்து வருகிறது. 'பாச மலர்' தங்கை சாவித்ரி போன்ற ஒரு சில ஹீரோயின் நடிகையர் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் ஏற்றுக் கொள்வார்கள். அப்படி தங்கை கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் நாயகியாக உயர்ந்து சாதனை புரிவது சாதாரண விஷயமல்ல.
பிரசன்னா, லைலா நடித்த 'கண்ட நாள் முதல்' படத்தில் லைலாவின் தங்கையாக ஒரு சுட்டித்தனமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரெஜினா.
அதன் பின் 'அழகிய அசுரா' என்ற சிறிய பட்ஜெட் படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பின் ஏழு வருடங்கள் கழித்து சிவகார்த்திகேயன் ஜோடியாக 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடித்த போதுதான் அட..யார் இவர், என பல ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். ஆனால், அடுத்து வந்த 'நிர்ணயம்' படம் அவருடைய நிலையை கொஞ்சம் இறக்கிவிட்டது. இருந்தாலும் தெலுங்கில் மீண்டும் வாய்ப்பு கிடைக்க அங்கு தற்போது முன்னணி இடத்துக்கு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
அப்படி ரெஜினா அதிகம் எதிர்பார்க்கும் படமாக உள்ள 'பவர்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. அந்தப் படத்தில் முன்னணி வசூல் நாயகனாக ரவி தேஜா ஜோடியாக நடிக்கிறார் ரெஜினா. இந்தப் படம் தன்னை முன்னணி ஹீரோயினாக உயர்த்திவிடும் என ரெஜினா நம்புகிறாராம். கன்னடத்தில் த்ரிஷா நடித்த 'பவர்' படம் சாதனை வசூல் செய்தது போல், இந்த தெலுங்கு 'பவர்' ரெஜினாவுக்குக் கை கொடுக்குமா என்பது சில நாட்களில் தெரிந்து விடும்.