“மெட்ராஸ் - பூலோகம்” ஒரு ஏரியா கதையாமே....!

கார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்க 'அட்டகத்தி' பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'மெட்ராஸ்' படமும், ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் இயக்கியுள்ள 'பூலோகம்' படமும் ஒரே கதையில்தான் உருவாக்கப்பட்டுள்ளதாம். இரண்டு படங்களுமே வட சென்னையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளன. ஒரு சாதாரண இளைஞன் எப்படி சிறந்த பாக்சிங் வீரனாகிறான் என்பதுதான் படத்தின் கதையாம்.

இரண்டு படங்களுமே வெளியீட்டுக்குத் தயாராகி பல மாதங்களாகியும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பே இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என்றார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் இன்று வரை படம் வெளியாகவில்லை. '

மெட்ராஸ்' படம் அக்டோபரில் வெளியீடு என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துவிட்டதாம். ஆனால், 'பூலோகம்' படம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாமலே உள்ளது. அந்தத் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஐ' படத்தின் வெளியீட்டில்தான் பிஸியாக உள்ளதாம். ஏற்கெனவே, இந்த நிறுவனம் தயாரித்து, பல முறை தாமதப்படுத்தப்பட்டு வெளியான 'திருமணம் என்னும் நிக்கா' படம் வந்த சுவடே தெரியாமல் தியேட்டரை விட்டுப் போனது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் கார்த்தியும், ஜெயம் ரவியும் அடுத்து வெளியாக உள்ள படங்களில் வெற்றி பெற்ற ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இவர்களின் முந்தைய படங்கள் பெரிய வெற்றியைப் பெறாததே இதற்குக் காரணம். இன்னுமொரு விஷயம், இந்த படங்களின் கதையைப் போன்றே இன்னும் இரண்டு சிறிய பட்ஜெட் படங்களும் தமிழில் தயாராகி வருகிறதாம். “எந்த ஃபாரின் பட சிடியை ஒரே நேரத்துல பார்த்தாங்களோ...” என இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் கண்டிப்பாகக் கேட்கப் போகிறார்கள்.