பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் அட்டன்போரக் காலமானார்

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான ரிச்சர்ட் அட்டன்போரக் லண்டனில் நேற்று காலமானார். இத்தகவலை அவரது மகன் மைக்கேல் அட்டன்போரக் அறிவித்துள்ளார். உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக தனது தந்தை உயிரிழந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

90 வயதாகும் ரிச்சர்ட் அட்டன்போரக், 60 ஆண்டுகளாக சினிமா உலகில் நடிகராகவும், டைரக்டராகவும் வலம் வந்துள்ளார். ஓ வாட் எ லவ்லி வார், சாப்லின், சடோலாண்ட்ஸ் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர் அட்டன்போரக். இவர் யூனிசெப் உள்ளிட்ட பல மனித நேய அமைப்புக்களின் தூதராகவும் இருந்துள்ளார்.


பிரிட்டனின் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்த இவர், உலக அளவில் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற ஜூராசிக் பார்க் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1942ல் இவர் இயக்கிய இன் விச் வி சர்வ் படத்திற்காக இவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இவர் இயக்கிய காந்தி படம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.