அஞ்சான் படத்திற்கு வரி விலக்கு கிடைக்காதது ஏன்...?!

நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்திற்கு, வரி விலக்கு அளிக்கும்படி தேர்வுக்குழு உறுப்பினர் யாரும் பரிந்துரை செய்யாததால் வரி விலக்கு அளிக்க இயலாது என, அரசு அறிவித்துள்ளது. தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்பது உட்பட, பல நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் திரைப்படங்களுக்கு, தமிழக அரசு வரி விலக்கு அளித்து வருகிறது. வரி விலக்கு அளிக்க தகுதியான திரைப்படங்களை தேர்வு செய்ய, ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர், சூர்யா நடித்து, சமீபத்தில் வெளியான, அஞ்சான் திரைப்படம், கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்கு, தகுதியானது அல்ல என, பரிந்துரை செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு...


ரசியா, இணை ஆணையர், இடை மாநில புலனாய்வுக் குழு: இப்படம், யு சான்றிதழ் பெற்றிருந்தாலும், வன்முறை காட்சிகள், அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. ஆபாச நடன காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பிற மொழி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.அரசின் நிபந்தனைக்கு உட்படாததால், இப்படம் கேளிக்கை வரி விலக்கிற்கு, தகுதியானது அல்ல.

அருள், இயக்குனர், மொழி பெயர்ப்பு, தமிழ் வளர்ச்சித் துறை: தமிழில் தலைப்பு இருந்தாலும், யு சான்றிதழ் பெற்றிருந்தாலும், திரைப்படத்தில், ஆங்கிலம் மற்றும் இந்தி சொற்கள், எண்ண முடியாத அளவில் உள்ளன. வன்முறை காட்சிகள், மிக அழுத்தமாக உள்ளன. எனவே, இப்படம் கேளிக்கை வரி விலக்கிற்கு, தகுதியானது அல்ல.

ராஜேந்திரன், சினிமா இயக்குனர்: ஒரு இந்தி படத்தில், தமிழ் வசனங்கள் இருப்பது போல, படம் உள்ளது. திரைப்படத்தில், வன்முறை காட்சிகள் தவிர, வேறு ஒன்றும் இல்லை என்பதாலும், சமுதாயத்திற்கு விரோதமான திரைப்படம் என்பதாலும், இத்திரைப்படத்திற்கு, வரி விலக்கு அளிக்கக் கூடாது.

ஆர்.வி.உதயகுமார், சினிமா இயக்குனர்: திரைப்படத்தின் தலைப்பு, தமிழில் உள்ளது என்றாலும், யு சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்றாலும், வன்முறை காட்சிகள் அளவுக்கு அதிகமாக உள்ளன. பாடல் காட்சிகளில், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி பிரயோகம் உள்ளது. எனவே, இப்படம் வரி விலக்கு பெற, தகுதியானது அல்ல.

வாணி ஜெயராம், பின்னணி பாடகி: திரைப்படத்தில், வன்முறை அதிகமாக உள்ளது. ஆங்கில வார்த்தைகள் நிறைய உள்ளன. எனவே, இப்படத்தை கேளிக்கை வரி விலக்கிற்கு பரிந்துரைக்கவில்லை.

எல்.ஆர்.ஈஸ்வரி, பின்னணிப் பாடகி: திரைப்படத்தின் தலைப்பு, தமிழில் இருந்தாலும், யு சான்றிதழ் பெற்றிருந்தாலும், இந்தி படத்தை தமிழில் பார்ப்பது போல் உள்ளது. சண்டை காட்சிகள், மிக அதிகமாக உள்ளன.அரசு நிபந்தனைக்கு தகுதியானது அல்ல என்பதால், இப்படத்தை வரி விலக்கிற்கு, பரிந்துரை செய்ய முடியாது.இவ்வாறு, தேர்வுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாரும் பரிந்துரை செய்யாததால், அஞ்சான் படத்திற்கு, வரி விலக்கு அளிக்க இயலாது என, அரசு அறிவித்துள்ளது.