மனைவி ஆசையை நிறைவேற்றி விட்டேன் ஜிப்ரான்... !

வாகை சூடவா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் 'ரன் ராஜா ரன்' என்ற தெலுங்குப் படம் மூலம் அங்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தமிழில் இவர் இசையமைத்த “வத்திக்குச்சி, குட்டிப்புலி, நய்யாண்டி” ஆகிய படங்களில் 'குட்டிப்புலி' மட்டுமே ஓரளவிற்கு வெற்றி பெற்றிருந்தாலும், திடீரென கமல்ஹாசனின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக மாறினார்.

அதைத் தொடர்ந்து கமல் நடிக்கும் 'விஸ்வரூபம் 2, உத்தம வில்லன்,' த்ரிஷ்யம் படத்தின் மலையாள ரீமேக் என ஒரே சமயத்தில் அவர் நடிக்கும் மூன்று படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
வேறு எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு இது.
இதன் ரகசியம் என்ன என்பதை மற்ற இசையமைப்பாளர்கள் இன்னும் ஆராய்ந்து வருவதாகக் கேள்வி. இவர் இசையமைத்துள்ள 'அமர காவியம், திருமணம் என்னும் நிக்காஹ்' ஆகிய படங்கள் விரைவில் வெளிவர உள்ளன.

தற்போது, தெலுங்கில் 'ரன் ராஜா ரன்' என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாவதைப் பற்றிய அவர் கூறுகையில், “எனக்கு தெலுங்கு நன்றாகப் புரியும். ஏனென்றால், எனது மனைவி விஜயவாடாவைச் சேர்ந்தவர்தான். அவர் அடிக்கடி தெலுங்குப் படங்களுக்கும் இசையமைக்க முயற்சி செய்யுங்களேன் என்று சொல்வார். இப்போது அவருடைய ஆசையை நிறைவேற்றி விட்டேன். இந்தப் படத்திற்காக நன்றாக உழைத்திருக்கிறேன். இதனால், இன்னும் பல வாய்ப்புகள் வரும் என நினைக்கிறேன், ” என்று கூறியிருக்கிறார்.

கமல்ஹாசனையே கவர்ந்தவருக்கு, மற்ற தயாரிப்பாளர்களைக் கவர்வது கடினமா என்ன ?