அன்புள்ளம் கொண்ட விவசாயி.

விஸ்வநாதன் எனும் அரசன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அந்நேரம், ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.

அவனது ஆடையில் படிந்திருந்த தூசியும், கலைந்த தலைமுடியும் அவன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.
அவன் மன்னனிடம், "அரசே........உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள்.
அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்" என்றான்.அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள்.

அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.அரசனை பார்க்க வந்திருந்த பிரமுகர் ஒருவர், "அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?" என்று கேட்டார். மன்னனோ, "அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து கஷ்டத்துடன் நடந்து வந்திருக்கிறான். அவனது போலித்தனம் இல்லாத உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது" என்று கூறினான்.
நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.