சாப்பிடுவது எப்படி?

சாப்பிடுவது தினமும் மூன்று வேளை செய்யும் செயல். எப்படிச் சாப்பிடுவது என்று கூடவா எங்களுக்குத் தெரியாது என்கிறீர்களா? சாப்பிடுவது நாம் அன்றாடம் செய்யும் செயல் தான். நம் நினைவுள்ள நாளிலிருந்து செய்யும் செயல், இனியும் கடைசிக் காலம் வரை செய்யப் போகும் செயல்.

ஆனால் நாமனைவரும் முறையாகச் சாப்பிடுகிறோமா என்பது தான் கேள்விக்குறி. அப்படியா சொல்கிறீர்கள்? சரி, எப்படித் தான் சாப்பிடுவது என்று கேட்கிறீர்களா? இதோ...

• சிலர் மிக வேகமாகச் சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாகச் சாப்பிடுவார்கள். எப்படிச் சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாக மெல்லப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். அப்படியே விழுங்கக் கூடாது.



• சிலர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவர். இன்னும் சிலர் ஒவ்வொரு வேளையும் சுமார் முக்கால் மணி நேரம் சாப்பிடுவர். அதுவும் தவறு, இதுவும் தவறு.

• சைவ உணவை சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விடலாம். அசைவ உணவு சாப்பிடும்போது கொஞ்சம் தாமதமாகத்தான் செய்யும். குறைந்தது சுமார் 5 நிமிடங்களும், கூடுதலா சுமார் பதினைந்து நிமிடங்களும் சாப்பிடுவதற்காக ஒதுக்குவது நல்லது. ஐந்து நிமிடங்களுக்கு குறைவாகச் சாப்பிடுவது நல்லதல்ல. பதினைந்து நிமிடங்களுக்கு அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதும் நல்லதல்ல.

• இரவில் எட்டு மணிக்குள்ளாக சாப்பிட்டு முடித்துவிடுங்கள். அதுவும் மிதமாக உண்பதே நல்லது.

• எந்த உணவை நாம் சாப்பிட்டாலும் கடித்துச் சுவைத்து அதன்பின்தான் விழுங்க வேண்டும். கோழி விழுங்குவதைப்போல வாயில் போடும் உணவை அப்படியே விழுங்கக்கூடாது. நிறையபேர் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள்.

• நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ்நீர் முக்கியப்பங்கு வகிக்கிறது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகள் இருக்கின்றன. அவை, பரோட்டிட் சுரப்பி, சப்மேன்டிபுலார் சுரப்பி, சப்லிங்குவல் சுரப்பி. இந்த மூன்று சுரப்பிகளிலிருந்தும் வரும் குழாய்கள் வாயினுள் வந்துதான் திறக்கின்றன.

 • பரோட்டிட் சுரப்பிதான் இந்த மூன்றில் மிகப் பெரியது. அடுத்ததாக உள்ள சப்மேன்டிபுலார் சுரப்பியே 70 சதவீத உமிழ்நீரை சுரக்கிறது. ஐந்து சதவீத உமிழ்நீர், மூன்றாவதாக உள்ள சப்லிங்குவல் சுரப்பியிலிருந்து சுரக்கிறது.

 • உணவைப் பார்த்தவுடன், உணவை நினைத்தவுடன், உணவின் வாசனையை நுகர்ந்தவுடன் உமிழ்நீர் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. உமிழ் நீரில் மிகஸ், புரோட்டீன், தாது உப்புக்கள் மற்றும் அமிலேஸ் என்ற என்சைம் ஆகியவை இருக்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் 1 முதல் 2 லிட்டர் உமிழ் நீர் வாயிலிருந்து வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. சாப்பிடுவது ஒரு முக்கியமான வேலை. இனி மேல், சாப்பிடும்போது இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.