உடல் எடையை குறைப்போருக்கான சில அறிவுரைகள்.

அதீத எடை என்பது ஒரு உலகளாவிய பிரச்சனையாகிவிட்டது. மேற்கத்தைய நாடுகளில் மட்டும் பேசப்பட்ட இவ்விடயம் இப்பொழுது ஆசிய நாடுகளிலும் தனது அழுக்கு முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.

அதீத எடையின் விளைவுகளும் குறைக்கும் வழிகளும்
எடை அதிகரிப்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதயநோய்கள், எலும்பு மூட்டுத் தேய்வுகள், போன்ற பல நோய்கள் வரும் என்பதை இப்பொழுது பலரும் உணர்கிறார்கள்.உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம் என்ற உணர்வு மேலாங்கி வருகிறது.

காலையில் வீதிகளிலும் கடற்கரை ஓரங்களிலும் நடைப் பயிற்சி செய்பவர் எண்ணிக்கை அதிகரிப்பிலிருந்து இதனை அறிய முடிகிறது.இளவயதினர் பெரும்பாலும் உடற்பயிற்சி நிலையங்களை நாடுகிறார்கள்.
ஆனால் மிகப் பெரும்பாலானவர்கள் இது பற்றிய எவ்வித உணர்வும் இன்றி சதா காலமும் வாய்க்குள் எதையாவது போட்டு மென்று கொண்டே இருக்கிறார்கள்.

இதனால் அவர்களது எடை அதிகரிக்கிறது. மேற் கூறிய நோய்கள் வந்து சேர்வதை தடுக்க முடியாது போய்விடுகிறது. நோயினால் ஏற்படும் உபாதைகள் தாக்கத் தொடங்கிய பின்னரே அதைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

ஆயினும் இத்தனை காலமும் சோம்பிக் கிடந்த உடலும், மென்று கொண்டெ இருந்த வாயும் சொல்வழி கேட்கின்றனவா?

எடையைக் குறைக்க வேறுவழிகள்
எடையைக் குறைக்க வேறு ஏதாவது வழி இருக்கிறதா என அப்படிப்பட்டவர்கள் கேட்கிறார்கள்.

நிச்சயம் மருந்துகள் இருக்கவே செய்கின்றன.

மிகத் தீவிரமாகக் குறைக்க வேண்டியவர்களுக்கு சத்திரசிகிச்சையும் உண்டு.

சத்திரசிகிச்சை
Gastroplasty என்ற சிகிச்சை முறை உண்டு. இரைபையை வெட்டிச் சிறியதாக்குவதால் கொஞ்சமாக உணவை உட்கொண்டதுமே வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.

ஆயினும் இது முற்றிலும் பாதுகாப்பான சத்திரசிகிச்சை என்று சொல்ல முடியாது. இச் சத்திரசிகிச்சைக்குப் பின் இலங்கையில் ஒரு பெண் இறந்த செய்தி பத்திரிகைகளில் பரவலாக அடிபட்டது ஞாபகம் இருக்கலாம்.

மருந்துகள்
தமது எடையைக் குறைக்க, சுய முயற்சி இன்றி மருந்துகளின் உதவியை நாடுகிறார்கள்.

எடை குறைப்பு மருந்துகளை உபயோகிக்கும் வரைதான் எடை குறையும். அத்துடன் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் சேர்ந்தால்தான் அம் மருந்துகள் பலன் கொடுக்கும்.
எடை குறைப்பு மருந்துகள் விலை அதிகமானவை.

வெறுமனே மருந்தை மட்டும் போட்டுக் கொண்டிருந்தால் எடை குறையாமல் போவது மாத்திரமின்றி அம் மருந்துகளின் பக்கவிளைவுகளையும் எதிர் நோக்க நேரிடும்.

சிபியுட்ரமின் (Sibutramine) 
எடை குறைப்பு மருந்துகளில் பிரபலமானது சிபியுட்ரமின் (Sibutramine) என்பதாகும். அதனால் வரக் கூடிய பக்கவிளைவுகளைப் பட்டியலிட்டால் மருந்தை உட்கொள்ள வேண்டாம் என நோயாளி வேகமாக விட்டு ஓடுவார். அவ்வாறு ஓடினால் நிறை குறையும் என்பதை மட்டும் நல்ல விளைவாகக் கொள்ளலாம்.

மருந்தின் பக்க விளைவுகள்
மனப்பதற்றம், மனச்சோர்வு நோய்,
வலிப்பு, திடீரென வந்துபோகும் மறதி,
இருதயத் துடிப்பின் ஒழுங்கு லயம் மாற்றமுறல்,
உயர்இரத்த அழுத்தம்,
மலச்சிக்கல், வாய் உலருதல். ஓங்காளம்,
உணவுகளின் சுவை கெடுதல், வயிற்றோட்டம்,
மூலநோய் தீவிரமடைதல்,
இருதயத் துடிப்பு வேகமாதல்,
தலைப்பாரம், தூக்கக் குறைபாடு,
தலையிடி,
பாலியல் செயற்பாட்டில் குறைபாடு,
ஒழுங்கற்ற மாதவிடாய்,
சிறுநீர் வெளியேறுவதில் சிரமம்,
பார்வை குறைவடைதல் ஏற்படலாம்.

அத்துடன் குருதியில் வெண்துளி சிறுதுணிக்கைகளின் (Platelet) எண்ணிக்கை குறைவடைதல்,
இவ்வாறு குறைந்தால் குருதியின் உறையும் தன்மை குறையும்,
அவ்வாறு குருதியின் உறையும்தன்மை குறைந்தால் சிறிய காயங்களிலிருந்து கூட அதிக இரத்தம் பெருக்கெடுக்கலாம்,
தானாகவே சருமத்தின் கீழ் இரத்தம் கசியலாம்.

மேலும் மருந்தின் ஒவ்வாமை விளைவு காரணமாக
தோல் அரிப்பு, தோற்தடிப்பு,
சரும அழற்சி போன்றவையும் ஏற்படலாம்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் (FDA) இம் மருந்து பாவனை பற்றி இருதய நோயாளருக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இதுவரை காலமும் இருதய நோயாளர்கள் இம் மருந்தை அவதானத்துடன் உபயோகிக்கலாம் எனக் கூறினார்கள்.ஆனால் தற்போதைய அறிக்கைப்படி இம் மருந்தை இருதய நோயாளர்கள் பாவிக்கக் கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி நோயாளருக்கு வழங்கும் மருந்துப் பெட்டியில் இந்த எச்சரிக்கையை தெளிவாக அச்சிடவும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எத்தகைய நோயாளிகளுக்கு எச்சரிக்கை
இருதய வழுவல் (Heart failure)
இருதய துடிப்பின் லயக்குறைபாடுகள் (Arrhythmia )
மாரடைப்பு, அஞ்சைனா போன்ற இருதய நோய்கள்
பக்கவாதம் மற்றும் திடீரென வந்து மறையும் பக்கவாதம்
கடுமையான உயர் இரத்த அழுத்தம்
கால் கை போன்ற பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய் நோய்கள் (Peripheral arterial disease)
வேறு மருந்துகள்

எடையைக் குறைக்க வேறு மருந்துகளும் உள்ளன. ஓலிஸ்டட் (Orlistat) என்பது மற்றொரு பிரபல மருந்தாகும்.இது உணவுக்கால்வாயில் செயற்பட்டு கொழுப்புகள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் மருந்தாகும்.

கொழுப்புப் பொருட்கள் உறிஞ்சப்படாததால் இவை மலவாயிலால் தானே ஒழுகக் கூடியது மிக முக்கிய பிரச்சனையாகும்.
அவசரமாக மலம் கழிக்க நேருதல்,
கட்டுப்படுத்த முடியாமல் திடீரென மலம் வெளியேறுதல்,
வயிற்றுப் பொருமல்,
வயிற்று வலி போன்றவை இம் மருந்தின் பக்க விளைவுகளாகும்.

இவற்றைத் தவிர 

அடிக்கடி சளி பிடித்தல்,
முரசு கரைதல்,
களைப்பு,
தலையிடி, மனப்பதற்றம்,
மாதவிடாய்க் குளப்படிகள்,
சிறுநீரகத் தொற்று நோய்கள்,
குருதியில் சீனியின் அளவு திடீரெனக் குறைதல்,
மூலத்தால் இரத்தம் வடிதல், ஈரல் பாதிப்பு

பக்க விளைவுகள் அனைத்தும் அனைவருக்கும் வருமா என்றால் நிச்சயமாக இல்லை.
சிலருக்குப் பல பக்கவிளைவுகள் சேர்ந்தே தோன்றலாம்.
சில பக்க விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம்.
வேறு சிலருக்கு எதுவுமே ஏற்படாமலும் போகலாம்.

இருந்தபோதும் அத்தனை பக்கவிளைவுகள் வரக் கூடிய சாத்தியத்துடன் மருந்தைப் பாவித்துத்தான் எடையைக் குறைக்க வேண்டுமா உங்கள் முன் உள்ள தேர்வாகும்.

மருந்துகளை உபயோகித்து எடையைக் குறைத்தாலும்

உணவுக் கட்டுப்பாடு,
உடற் பயிற்சி
வாழ்க்கை முறை மாற்றங்கள்
இல்லையேல் மருந்தை நிறுத்தியதும் மீண்டும் எடை அதிகரிக்கும் என்பது நிச்சயம்.
உங்கள் எடைக் குறைப்பு முயற்சியை எங்கு ஆரம்பிக்கப் போகிறீர்கள்?

தொடர்ந்து நிலைக்கப் போகிற வாழ்க்கை முறை மாற்றங்களிலா
அல்லது கடுமையான பக்கவிளைவுகளுடன் குறுகிய காலம் மட்டும் நிற்கப் போகும் மருந்துகளிலா?நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.