இரத்தம், கத்தியின்றி பல் சிகிச்சை முறை.

பற்களில் உண்டாகக்கூடிய நோய்களாக பற்சொத்தை மற்றும் ஈறு, பல் வேர்கள் மற்றும் தாடை எலும்பில் ஏற்படும் கோளாறுகள் என்பவற்றையே குறிப்பிட்டு கூறலாம். இவற்றில் ஏற்படும் கோளாறுகளின் இடத்தைப் பொறுத்து பல்வேறு பெயர்களைப் பெறுகின்றன.

பற்சொத்தைக்கு முக்கியமான காரணம், உணவுப் பழக்கவழக்கம் தான். இந்தியா, இலங்கை போன்ற அனேக ஆசிய நாடுகளின் உணவுக் கலாச்சாரத்தில் மாச்சத்து, இனிப்பு என்பன அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. பற்களில் எளிதில் படிந்துவிடும் இவற்றை, உணவு வேளைக்குப் பின் முறையாக அகற்ற பெரும்பாலானோர் தவறிவிடுகின்றனர்.இதனால், உணவைச் ஜீரணிக்கச் செய்யும் பக்டீரியாக்கள், பற்களில் தங்கும் உணவை, பற்களில் வைத்தே ஜீரணிக்கச் செய்கின்றன. இதனால் பற்சொத்தை ஏற்படுகிறது.

சிலரது உமிழ்நீர் கெட்டித்தன்மை உடையதாக இருக்கும். இதனால், மாச்சத்து, இனிப்பு போன்றன பற்களின் உட்பகுதியில் அதிக நேரம் தேக்கி வைக்கப்படுவ தாலும் பற்சொத்தை உண்டாகிறது.
புகைப் பழக்கம், உமிழ்நீரைக் குறைவாகச் சுரக்க வைத்துவிடும். இவையனைத்துக்கும் மேலாக, நாம் தெரிவு செய்யும் பற்றூரிகை, பற்பசை, பல் துலக்கும் முறை என்பனவற்றின் அடிப்படையிலும் பற்குறைபாடுகள் ஏற்படுகின்றன.

பற்களின் ஆதாரம் வேர். இது, ஈறு மற்றும் தாடை எலும்பு போன்றவற்றின் உதவியுடன் பற்களைப் பிடித்து வைத்திருக்கின்றது. இந்தத் துணையுறுப்புக்களில் உண்டாகும் பாதிப்புகள் நாம் பற்களை இழக்கக் காரணமாகிவிடுகின்றன.

பொதுவாக, உமிழ்நீரானது, கீழ்த் தாடையின் முற்பகுதியில் அதிக நேரம் தங்கி நிற்கும். உமிழ்நீரில் காணப்படும் கால்ஷியம், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் படிந்து விடுகிறது. அளவுக்கதிகமாக இது தங்கி விடுவதாலும், இது சரியாகச் சுத்தம் செய்யப்படாமையாலும் அப்பகுதியில் காரை ஏற்படுகின்றது. அதைத்தொடர்ந்து காரை விலகி, பல்லின் வேர்கள் பாதிக்கப்படுகின்றன. இறுதியாக, தாடை எலும்பும் பாதிக்கப்படுகின்றன. எனவே, பற்குறைபாடுகளை உடனுக்குடன் கவனித்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நீண்ட நாற்களுக்கு அழகிய புன்னகை உங்களுக்குச் சொந்தமாக இருக்கும்.

வயது வந்தவர்கள், அதாவது 32 பற்களும் வளர்ந்துவிட்டவர்கள் பலரும், ஒரு பல் விழுந்துவிட்டால், ஒரு பல்தானே என்று அலட்சியமாக இருக்கிறார்கள். ஆனால், ஒரு பல் விழுந்த ஆறு மாதங்களுக்குள் அந்த இடைவெளி செயற்கைப் பல் மூலம் நிரப்பப்பட வேண்டும். முக்கியமாக, கடைவாய்ப்பல். ஒரு பக்கத் தாடையில் ஒரு கடைவாய்ப் பல்லை இழந்துவிட்டால், அந்தப் பக்கத்தால் உணவை அரைக்க முடியாது. அந்தப் பல்லை மீண்டும் பொருத்திக்கொள்ளாதவிடத்து, நாளடைவில், இது நமது மூளையில் பதிந்து, உணவு உண்ணும் வேளைகளில், இடது பக்கத்தை முழுமையாகத் தவிர்த்து, வலது பக்கத்தால் மட்டுமே உணவை அரைக்க ஆரம்பிப்போம். இதனால் இடதுபக்கப் பல்வரிசை இயக்கமே இன்றிப் போய்விடும். அது மட்டுமல்லாமல், விழுந்த கடைவாய்ப் பல்லின் இடைவெளியை நோக்கி, அருகில் இருக்கும் அடுத்த கடைவாய்ப் பல் சரிய ஆரம்பிக்கும். இதனால் அந்தப் பல்லின் அருகில் ஏற்படும் இடைவெளியில் உணவுத் துணிக்கைகள் செ ன்று தங்கி பற்சொத்தையை உண்டாக்கும்.

அது மட்டுமன்றி, கீழே ஒரு பல் விழுந்துவிட்டால், அதற்கு நேர் மேல் இருக்கும் பல்லும், கடிபடுவதற்கான ஆதாரத்தைத் தேடிச் சற்றுக் கீழே இறங்குகிறது. இதனால், மேல் வரிசைப் பற்களில் ஏற்ற-இறக்கம் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் உணவுத் துணிக்கைகள் தங்குகின்றன. விளைவு, மேற்பற்களும் சொத்தையாகும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, செயற்கைப் பல் கொண்டு இடைவெளி நிரப்பப்பட்டால், மீதியுள்ள இயற்கையான பற்களும் காப்பாற்றப்படும்.

செயற்கைப் பற்களைப் பொறுத்தவரையில், இதில் இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று, விழுந்த அல்லது பிடுங்கப்பட்ட பல்லுக்கு மாற்றீடை உடனடியாகவே பொருத்துவது. இதன்போது, விழுந்த பல்லின் வேர்க்கால்களைப் பயன்படுத்தி செயற்கைப் பல்லைப் பொருத்தலாம். இரண்டாவதாக, விழுந்த பல்லின் வெற்றிடத்தில், பற்களைத் தாங்கிப்பிடிக்கும் எலும்பு வளரும் வரை, அதாவது சுமார் ஆறு மாத காலம் வரை பொறுத்திருந்து, அதன்பின் செயற்கைப் பல்லைப் பொருத்திக்கொள்ளலாம். தற்போது, ஸிர்க்கோனி எனப்படும் செயற்கைப் பல் அறிமுகமாகியிருக்கிறது. இது முன் வரிசைப் பற்களுக்கு மாற்றீடாகப் பயன்படுத்த மிகவும் பொருத்தமானவை. எனவே, செயற்கைப் பற்களைப் பொருத்திக்கொண்டால் அது வித்தியாசமாக, விகாரமாகத் தெரியுமே என்ற பயமும் வேண்டாம்.

சிலர், மேற்தாடைப் பற்களை அகற்றுவதால் பார்வை பாதிக்கப்படும் என்றெண்ணி, பற்சொத்தையுடனேயே இருந்துவிடுகிறார்கள். இதனால், உறுதியான மேற்புறப் பற்களும் பாதிக்கப்பட்டுவிடும். உண்மையில் இது ஒரு தவறான கருத்து. மேற்றாடைப் பற்களுக்கும் பார்வை நரம்புக்கும் தொடர்பு இல்லை. அதுபோலவே, நீரிழிவு நோயாளர்கள் பற்சிகிச்சை செய்துகொள்ள முடியாது என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. அதுவும் தவறே. நீரிழிவு நோயாளிகள் பற்சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்பின், அதற்கேற்ற ஆரோக்கியமான உடல்நிலைக்கு அவரைக் கொண்டுவந்தபின் சிகிச்சை வழங்க முடியும்.

பற்சிகிச்சைத் துறையானது வேகமாக முன்னேறிவரும் ஒரு துறை. இதில், புதுப்புது மாற்றங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். அவ்வகையில், மிக அண்மையில் அறிமுகமாகியிருக்கும் சிகிச்சை முறை டையோட் லேசர் எனும் கதிர்வீச்சு சிகிச்சை முறையே. தற்போது பல மருத்துவமனைகளிலும் பற்சிகிச்சைக்கு இந்த முறையையே பயன்படுத்துகின்றனர். இந்த சிகிச்சையில் கதிர்வீச்சை த் தவிர வேறெந்தத் தொடர்பும் பல்லுக்கும் உபகரணத்துக்கும் இருக்காது. இதனால், வலி, இரத்த இழப்பு இருக்காது. நோய்த்தொற்றும் தவிர்க்கப்படுகிறது. புண்களும் விரைவில் ஆறிவிடும். முக்கியமாக, பாரம்பரிய பற்சிகிச்சை முறைகளில் பயன்படுத்தப்படும் குறடு போன்ற பயமுறுத்தும் மருத்துவ உபகரணங்கள் இருக்காது. ஊசி போட வேண்டிய தேவையும் இருக்காது. ஒரே நாளில் சிகிச்சையும் முடிந்துவிடும்.

சிலருக்குப் பற்கள் முன்னோக்கி நீண்டு, வாய்ப்பகுதி விகாரமாக இருக்கும். இதில் ஒரு சாராருக்குப் பற்கள் மட்டும் நீண்டிருக்கும். இன்னொரு சாராருக்கு, பற்களைத் தாங்கிப் பிடிக்கும் தாடை எலும்பே நீண்டிருக்கும். பற்களில் மட்டும் பிரச்சினை இருப்பவர்களுக்கு க்ளிப் மூலம் தீர்வளிக்க முடியும். தாடை எலும்பு முன்னோக்கி நீண்டிருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் எலும்பையும் பற்களையும் சரிசெய்துவிடலாம்.




நன்றி : வீரகேசரி