உங்களின் மூளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

100,000,000,000 எவ்வளவு என்று கணக்கிட்டு விட்டீர்களா? ஆம், பத்தாயிரம் கோடி; இவ்வளவு செல்கள் நம் ஒவ்வொருவரின் மூளையிலும் உள்ளன. வியப்பின் உச்சிக்கே சென்று விட்டீர்களா?

இவ்வளவு செல்களையும் நாம் பயன்படுத்த முடியாவிட்டாலும், செல்களை கொல்லும் வேலையை மட்டும் செய்கிறோம். சரியாக சாப்பிடாமல், சரியாக தூங்காமல், உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல். இதனால் தான் சோர்வு முதல், பல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஒருவர் கோமா நிலைக்கு செல்வதற்கும் இது தான் காரணம்.

 உங்கள் மூளையில் உள்ள செல்களை கொல்லாதீர்கள்; என்னது, நமக்கு நாமே மூளை செல்களை கொல்ல முடியுமா என்று கேட்கலாம்.
அது தான் இப்போது இளைய தலை முறையினரிடம் காணப்படுகிறது.எந்த ஒரு வேலையில், தொழிலில் இருக்கும் சிலர் மட்டும் தான் "பேலன்ஸ்' ஆக இருப்பர்; அவர்கள் சுறுசுறுப்பு குறையாது. ஆனால், சிலரைப் பார்த்தால், "டென்ஷன்...' என்றே சொல் லிக் கொண்டிருப்பர். சரியாக தூங்கமாட்டார்கள்; சாப்பிடமாட்டார்கள்; இவர்கள் தான் அதிகபட்சம் மூளை செல்களை "கொல்'கின்றனர். அதாவது, செல்கள் செயலிழந்துபோகின்றன.

மன அழுத்தம் வேண்டவே வேண்டாம்.
தூக்கம் வராமல் இருக்க காரணம், பலருக்கும் உள்ள "டென்ஷன்' தான். மன அழுத்தம் பல வகையில் இவர் களை பாதிக்கிறது. மனதில் எதையும் போட்டுக்கொண்டு, தேவையில்லாமல் மண்டையை குழப்பிக் கொள்வதால் மனஅழுத்தம் அதிகமாகிறது."டென்ஷன்' பேர்வழிகளுக்கு, கார்டிசோல் சுரப்பி அதிகமாக சுரந்து, மூளை செல்களை குறைக்கும் வேலையை செய்கிறது. அதனால், "டென்ஷன்' என்று இனி சொல்லாதீர்கள்; மனதை சமப்படுத்துங்க.

தூக்கம் 
மூளை செல்கள் குறையாமல் இருக்க, முதலில் கைகொடுப்பது சீரான தூக்கம் தான். 8 மணி நேர தூக்கம் தேவை என்று சொன்னாலும், சிலருக்கு 7, 6 மணி நேரம் தான் தூக்கம் வருகிறது. இது தவறல்ல என்கின்றனர் டாக்டர்கள். ஆனால், தூக்கத்தை மட்டும் தியாகம் செய்யக்கூடாது; தினமும் சரியான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.

"சிப்ஸ்'பான அயிட்டங்கள்
அவசரத்துக்கு ஏதோ சாப்பிடுவது, சமோசா, சிப்ஸ் போன்ற மொறு, மொறுக்களை சுவைப்பது என்பதை பழக்கப்படுத்திக்கொள்வது, வயதாகும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது, இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. சுகாதாரமானது அல்ல என்று தெரிந்தால், கண்டிப்பாக அதை தவிர்ப்பது நல்லது; ருசிக்கு சாப்பிடும் போது, சுகாதாரமானதா என்பதையும் அறிவது முக்கியம்.

தண்ணியே போ... போ
மது அருந்துவதால் பல பிரச்னைகள், ஐம்பதை தாண்டும் போது தான் தெரியும். சிலர் கண்முன் தெரியாமல் கண்டபடி குடிப்பதும், பல பிராண்டுகளை சுவைப்பதும் உண்டு. இவர்களுக்கு பின்னால், பெரும் ஆபத்து உள்ளது என்பதை அறிவதே இல்லை. ஆல்கஹால் செய்யும் கெடுதல் போல, வேறு எதுவும் உடலுக்கு செய்வதில்லை. மூளை செல்களை பாதிக்கச் செய்வதில் இதற்கு அதிக பங்குண்டு என்கின்றனர் டாக்டர்கள்.

"எக்சோடாக்சின்'
பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்களில் அடைக்கப்பட்ட கொழுப்பு சத்துள்ள "ஜங்க் புட்' வகை உணவுகளில் "எக்சோடாக்சின்' என்ற ரசாயன சத்து உள்ளது. இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு "ஜங்க் புட்' தான் பிடித்தமானது. எப்போதுமே இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், இந்த ரசாயன பாதிப்பு அதிகமாக இருக்கும். விளைவு, மூளை செல்கள் அதிகமாக குறைவதே.

கண்டிப்பாக குடிங்க 
ஆமாங்க, தண்ணீர் குடிங்க; ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீராவது, குடிநீராகவும், திரவமாகவும் உடலுக்கு போக வேண்டும். அப்போது தான் மூளைக்கு நல்லது.
உடலின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கு காரணம் மூளை தான்; மூளை செல்கள் தான், உடலில் ஒவ்வொரு இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதனால், தண்ணீர் குடிக்க மட்டும் மறக்கக்கூடாது.

தரை சுத்தமாக...
இப்போதெல்லாம், வீட்டை சுத்தமாக்கவே, பல வகை ரசாயன பாட்டில்கள் வந்துவிட்டன. எதற்கெடுத்தாலும் இந்த ரசாயன கலவையை "ஸ்ப்ரே' செய்து விடும் போக்கு அதிகரித்து விட்டது. ஒரு பக்கம், கிருமிகள் பூச்சிகள் வராமல் தடுக்கிறது என்றாலும், அதை சுவாசிப்பதால், நம் மூளை செல்கள் குறைய வாய்ப்பு அதிகம்.
இது போலத்தான் பெயின்ட் போன்ற ரசாயன கலவைகளை நுகர்வதும் கெடுதல் தான். முடிந்தவரை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.

காய்கறி, பழங்கள்
இந்த மூளை செல்கள் பாதிப்பை தவிர்க்க, சிம்பிள் வழி இதோ; எதுவும் செய்ய வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்; பழங்களை சாப்பிடுங்கள். போதும்.
பி 12, பி 6 போன்ற வைட்டமின் சத்துகள் கிடைப்பது, பச்சைக் காய்கறிகளிலும், பழங்களிலும் தான். இதை மறந்து விடாதீர்கள்.