சிம்புவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதலா..!

சிவகார்த்திகேயன் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியின் மூலம் சிம்பு, சிவகார்த்திகேயன் இடையே இருக்கும் மோதல் தொடர ஆரம்பித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சிம்பு பொதுவாக, 'இன்னொருத்தர் முதுகில் ஏறி வளர்கிறவரைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை' என்று தெரிவித்திருந்தார்.

 சிவகார்த்திகேயனைப் பற்றித்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார் எனப் பலரும் பேச ஆரம்பித்தார்கள். தனுஷ் தான், சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து அவருடைய தயாரிப்பில் உருவாகும் படங்களில் நாயகனாக நடிக்க வைத்தார். அதனால்தான் சிம்பு அப்படிப் பேசினார் என்றார்கள். அதன் பின் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து தனுஷ், 'நானும் ரௌடிதான்' படத்தைத் தயாரிக்க ஆரம்பித்த பின் அந்தப் பேச்சு இன்னும் அதிகமானது. சிவகார்த்திகேயனுக்கும், தனுஷிற்கும் இடையில் மோதல் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

தற்போது தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார் என்பதும் அந்த சந்தேகத்தில் மேலும் பெட்ரோலை ஊற்றியிருக்கிறது. மேலும், சிவகார்த்திகேயன் அவருடைய பேட்டியில் சிம்பு அப்படி சொல்லியிருந்தால் அது அவருடைய சொந்தக் கருத்து, அதை அவர் சொல்ல உரிமை உண்டு என்று சொல்லியிருக்கிறார்.

ஏற்கெனவே, சந்தானத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஆகாது என்றும் ஒரு பேச்சு இருந்து வருகிறது. சந்தானத்தை உருவாக்கியது சிம்பு என்றால், சிவகார்த்திகேயனை வளர வைத்தது தனுஷ் என்றே பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். அப்படியிருக்க சந்தானம், சிவகார்த்திகேயன் இடையிலான மோதல்தான் இப்படி ஒரு ரூபத்தில் கிளம்பி, சிம்புக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு பகை உணர்வைத் தூண்டியுள்ளதோ எனப் பலரும் சந்தேகிக்கிறார்கள். எப்படியோ சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மட்டும் சிலருக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிகிறது.