புத்தாண்டு என்பதை எவ்வாறு கொண்டாட வேண்டும்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்றாலே உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தூக்கம் தொலைத்து வீதிகளில் வலம் வருவதும், இளைஞர்கள் அரை போதையில் இருசக்கர வாகனங்களில் கூச்சலிட்டுக் கொண்டே விரைவதும் தவிர்க்க முடியாத புத்தாண்டு நள்ளிரவுக் காட்சிகளாகிவிட்டன.

புத்தாண்டு தினம் என்பது ‘இன்னொரு நாள், அல்லது இன்னொரு புது வருடம்’ எனும் பக்குவம் வளரவேண்டும். அல்லது கடந்த ஆண்டில் செய்த செயல்களை நியாயமான முறையில் திரும்பிப் பார்க்கும் ஒரு மைல் கல்லாக இந்த நாளைப் பயன்படுத்த வேண்டும்.
அதை விடுத்து வெறுமனே பொருளையும், நேரத்தையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.

மனிதத்தையும், குடும்ப உறவுகளையும், சமூக பிணைப்பையும் ஊக்கப்படுத்தும் செயல்களை புத்தாண்டு தினத்தில் கொண்டாடுவதே சிறப்பானதாக இருக்கும்.

* புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக நாம் ஆடம்பரமாய் பணம் செலவு செய்யும் போது நான்கு தெரு தள்ளி பசியில் தவிக்கும் குடும்பங்களை நினைத்துக் கொள்வோம். ஏதேனும் ஒரு குடும்பத்துக்கு ஏதேனும் ஒரு குறிப்பிடும்படியான உதவி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

* புத்தாண்டு தினத்தன்று வீட்டை விட்டு வெளியே சுற்றியலைந்து திரிவதை தவிர்த்து குடும்பத்தினருடன் பொழுதைச் செலவிடுவதே மிகவும் சிறப்பானது. அனைவருமாய் அமர்ந்து பேசி சிரித்து உணவு உண்டு குடும்பமாய் இருப்பது மிகவும் ரம்மியமானது, சிதைந்து வரும் குடும்ப உறவுகளை அது சீர்செய்யும்.

* அருகிலிருக்கும் முதியோர் இல்லத்தையோ, கைவிடப்பட்டோர் இல்லத்தையோ, மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்தையோ சந்தித்து அவர்களோடு சிறிது நேரத்தைச் செலவிடலாம். அவர்களுடைய புன்னகையில் உங்கள் புத்தாண்டு வெளிச்சம் பெறும்.

* குடிக்கமாட்டேன், புகைக்கமாட்டேன், உடற்பயிற்சி செய்வேன் என்னும் “நான்” சார்ந்த புத்தாண்டு வாக்குறுதிகள் தேவை தான். அத்தோடு மாதம் ஒரு முறை ஏதேனும் ஒரு நல்ல செயலை ஏழைகளுக்கோ, உதவி தேவைப்படும் எவருக்கோ செய்வேன் என உறுதி மொழி எடுங்கள்.

* தேவையற்ற தொலைக்காட்சிப் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தினமே புத்தாண்டு என்றாகிவிட்ட சூழலில் நல்ல புத்தகங்களுக்காகவோ, நண்பர்களை சந்திப்பதற்காகவோ இந்த ஆண்டேனும் நேரம் ஒதுக்குங்கள்.

* வேலைக்கு நேரத்தை ஒதுக்கும் அவசரத்தில் குடும்பத்தை இரண்டாம் பட்சமாக்கும் நிலையைத் தவிர்க்கவேண்டும். இந்த ஆண்டேனும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என முடிவெடுப்போம்.

* குழந்தைகளை ஏதேனும் ஒரு நல்ல செயலைச் செய்யப் பழக்குவோம். அவர்களை சிறியவர்கள் என ஒதுக்காமல் பிறருக்கு உதவிகள் செய்யும்போது அவர்கள் மூலமாக செய்து அவர்களுடைய பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.

* புத்தாண்டுக்கு எடுக்கும் முடிவுகளை இரண்டு மூன்று மாதத்துக்கு ஒருமுறை திரும்பிப் பார்த்து கடைபிடிக்கிறோமா என கவனிக்க வேண்டும். சரியான திட்டமிடுதல் மூலம் நமது வாழ்க்கை முறையும் வலுப்படும்.

* இந்த ஆண்டு எத்தனை முறை கடும் கோபம் ஏற்பட்ட போதும் அமைதியாய் இருந்தோம் என்பதை கணக்கிட வேண்டுமென முடிவெடுப்போம். ஒவ்வோர் முறை அமைதியாய் இருந்து சூழலை இயல்பாக்கும் போதும் அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களை அது மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

* மொத்தத்தில் புத்தாண்டு என்பது நாம் மனிதர்களாகப் பிறந்திருப்பதனால் மகிழவும், மனித நேயமும், மனிதனுக்குரிய குணங்களும் கொண்டு வாழ முயலவுமே என்பதை மனதில் குறிப்போம்.

புத்தாண்டு என்பது ஒரு நாள் அல்ல. அது ஒரு ஆண்டு என்பதை நினைவில் கொண்டு கொண்டாட்டங்களை வகைப்படுத்துவோம்