தீய குணங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகள்.

ஆழ்மனம் என்ற அரண்மனைக்கு மேல் மனம் தான் வாட்ச்மேன். யாரை உள்ளே விடுவது, யாரை உள்ளே விடக்கூடாது என்பதை அது தான் தீர்மானிக்க வேண்டும். அது பொறுப்பற்று இருந்தால், கவனக்குறைவோடு இருந்தால் யார் யாரோ உள்ளே நுழைந்து அரண்மனைச் சொத்துகள் சூறையாடப்பட்டு தீய வழிக்குப் பயன்படுத்தப்படும். உள்ளே விட்ட எதையும் வெளியேற்றுவது மேல்மனதிற்கு அவ்வளவு சுலபமல்ல.

மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது.
நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.


ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல்மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.

உதாரணத்திற்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது. ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது. பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம். இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.

இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது. இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும். எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.

தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது. ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு. ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும். மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை
என்று எடுத்துக் கொண்டுவிடும். ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும். எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ கொடுமையான செயல்களைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்ய சில தீவிரவாதிகளாலும், கொடியவர்களாலும் எப்படி முடிகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் கிடைக்கிறது.



நம்முடைய எல்லா தீய பழக்கங்களும் இப்படி உருவானவை தான். அதில் இன்பம் கிடைக்கிறது என்ற செய்தியை உள்ளே அனுப்பி அதில் ஆரம்பத்தில் ஈடுபடுகிறோம். அதில் நமக்குக் கட்டுப்பாடும் இருப்பதாக ஒரு தோன்றல் கூட ஆரம்பத்தில் சிலருக்கு இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எண்ணுவதுண்டு. ஆனால் ஆழ்மனதில் பதிந்து அது பழக்கமாக மாறி விட்ட பின்னர் அதைக் களைவது கிட்டத்தட்ட முடியாத காரியமே. இது போன்ற தீய பழக்கங்களை அமைத்துக் கொண்டு நாம் கஷ்டப்படும் போது ஆழ்மனம் ஒரு சாபக்கேடே.


’நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்று ஒரு குடிகாரன் சபதம் எடுத்துக் கொண்டு மறு நாள் மறுபடி போதையுடன் வருவதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறோம். ஆனால் அந்தக் குடிகாரன் அந்த சபதம் எடுக்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருந்திருக்கக்கூடும். மறுநாள் அந்த சந்தர்ப்பம் வரும் போது ஆழ்மனம் அந்த செயலுடன் மகிழ்ச்சியைப் பிணைத்து வைத்து இருப்பதால் குடிக்காமல் இருப்பது அந்த குடிகாரனுக்கு முடியாமல் போகிறது.


நல்ல புத்தகங்களைப் படிக்கையிலும், பெரியோர் பேச்சுகளைக் கேட்கையிலும் அந்த கணத்தில் நல்ல முறையில் எதிர்காலத்தில் இருந்து விட நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ’இனி மேல் கோபப்பட மாட்டேன்’, ’இனி மேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன்’ என்றெல்லாம் நாம் உறுதியுடன் நினைப்பதுண்டு. ஆனால் மறுநாளே நாம் பழைய படியே நடந்து கொள்வதற்குக் காரணமும் ஆழ்மனமே. முதலிலேயே பதித்து வைத்திருந்த தகவல்களையும், நம்பிக்கைகளையும் வேரோடு பிடுங்கி எறிகிற வரை நாம் எந்த விதத்திலும் மாறி விடப் போவதில்லை.


எனவே தவறான பழக்கங்களில் ஈடுபடும் முன்பே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மேல்மனம் விழிப்புணர்வோடு இருந்தால் அந்த தவறான விதைகளையே உள்ளே விடாமல் தடுப்பது மிக எளிதான விஷயம். விதைக்காமலேயே இருந்தால், அறுக்கவும் தேவை இல்லை. பின் வேரோடு பிடுங்கப் போராடவும் அவசியம் இல்லை.


சரி, நாம் ஒரு முறை தவறாக பழகி விட்ட எதிலிருந்தும் விடுபட முடியாதா, தீய பழக்கங்களைக் களைய முடியாதா என்றால், கஷ்டமானாலும் முடியும் என்பது தான் நல்ல செய்தி. எப்படி என்பதைப் பார்ப்போம்.


முதலில் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். நாம் முன்பு பார்த்த மூச்சு சீராகும் பயிற்சியையும், ஏதாவது ஒரு தியானத்தையும் செய்து அமைதியான மனநிலையில் இருங்கள்.


பிறகு, முதலில் நாம் நம் ஆழ்மனதில் பதிய வைத்திருந்த தவறான செய்திகளுக்கு எதிர்மாறான நல்ல, உணர்வு பூர்வமான செய்திகளை ஆழ்மனதிற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை மிகவும் விவரமாக மனதில் திரும்பத் திரும்ப எண்ணுங்கள். அந்தக் கஷ்டங்களை எல்லாம் அந்த பழக்கத்தோடு இணைத்துப் பாருங்கள்.


அந்தப் பழக்கத்தால் கஷ்டப்பட்ட நிகழ்ச்சிகளை உங்கள் மனதில் நிதானமாக ஓட விடுங்கள். உங்கள் பழக்கத்தால் நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் அடையும் துன்பங்களையும் படமாக மனதில் ஓட விடுங்கள். மனம் அதைச் செய்ய மறுத்து முரண்டு பிடிக்கும். ஆனாலும் உறுதியாக அதைச் செய்யுங்கள். உண்மையாக நேர்ந்தவற்றை அப்படி சினிமா பார்ப்பது போல் கசப்பாக இருப்பினும் மனதில் ஓட விடும் போது அதன் தாக்கம் மனதில் விரைவில் ஆழப்படும்.


அடுத்ததாக அந்தப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியையும், மேன்மையையும் ஆழமாக சிந்தியுங்கள். அந்தப் பழக்கத்திலிருந்து நீங்குவதுடன் அதையெல்லாம் இணைத்து மனதில் பதியுங்கள். சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல மனதை ஒருமுனைப்படுத்தி இப்படி இரண்டு விதமாகவும் ஆழமாக சிந்தித்து ஆழ்மனதில் பதிய ஆரம்பியுங்கள்.


இத்தனை நாட்கள் அந்தப் பழக்கத்துடன் சுகத்தையும், அதை விடுவதுடன்
அசௌகரியத்தையும் இணைத்து பதிய வைத்திருந்த ஆழ்மனம் இந்தப் புதிய நேர்மாறான செய்தியை உள்ளே பதித்துக் கொள்ளத் துவங்கும். அப்படி புதிய செய்தி ஆழமாகப் பதியும் வரை இதைத் தொடர்ந்து செய்யுங்கள். அத்துடன் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு முழுக் கட்டுப்பாட்டுடன் நீங்கள் இருப்பது போலவும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளாக நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒரு கற்பனைக் காட்சியையும் மனதில் முடிந்த வரை தத்ரூபமாக எண்ணுங்கள்.


இந்த பயிற்சி காலம் வரை அந்தப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க உங்களுக்கு உண்மையான ஆர்வமும், மன உறுதியும் தேவை. அது மட்டும் முடிந்தால் சில நாட்களிலேயே அந்த தீய பழக்கத்திலிருந்து சுலபமாக விடுதலை பெற்று விடலாம். (மனவியல் அறிஞர்கள் இது போன்ற புதிய பழக்கங்கள் நம்மிடம் வெற்றிகரமாக நிலைத்து நிலைக்க துவக்கத்தில் 21 நாட்கள் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தல் அவசியம் என்கிறார்கள்.)


எத்தனை ஆண்டுகளாக உங்களிடம் இருந்தாலும் சரி தீய பழக்கங்களையும், பலவீனமான குணாதிசயங்களையும் இந்த முறையில் நீங்கள் உங்களிடமிருந்து விலக்கி விடலாம்.