மைக்ரோவேவ் ஓவன் கண்டு பிடிக்கப்பட்ட முறை.

இன்றைய நவீன காலத்தில் `மைக்ரோவேவ் ஓவன்’கள் இல்லாத நாடு இல்லை என்றே கூறும்நிலை வந்து விட்டது.மைக்ரோவேவ் ஓவன் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்று தெரியுமா? இரண்டாம் உலகப் போரின்போது கப்பல்களையும், விமானங்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் `மேக்னட்ரான்’ என்ற பொருள் பயன்படுத்தப்படும். அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். பெர்சி ஸ்பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார்.

ஒரு பெரிய பல்பில் இருந்துவரும் வெப்பம் அந்த `மேக்னட்ரானில்’ இருந்து வரும். ஒருநாள் ஸ்பென்சர் குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த மிட்டாய் உருகிவிட்டது. அப்போதுதான் அவருக்கு, `இதைச் சமையல் உபகரணமாகப் பயன்படுத்தலாமே!’ என்று தோன்றியது. உடனே `மைக்ரோவேவ் ஓவன்’ பிறந்தது.

ஸ்பென்சரும், அவரது உதவியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். பாப்கார்ன், பன்றி இறைச்சி போன்றவற்றைக் கொண்டு பரிசோதித்தார்கள். ஓவனுக்குள் வைக்கப்பட்ட அவை, நன்றாகச் சமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, வர்த்தகரீதியாக மைக்ரோவேவ் ஓவன்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டது.

1953-ம் ஆண்டில் உரிமம் பதிவு செய்யப்பட்டு, ஏழே ஆண்டுகளில் உலகின் வசதிமிக்க சமையலறைகளில் நுழைந்துவிட்டது `மைக்ரோவேவ் ஓவன்’. பெர்சி ஸ்பென்சரின் கவனிக்கும் திறனும், ஆர்வமும் ஒரு கண்டுபிடிப்பாக மலர்ந்து, இன்று பலரது சமையல் வேலையை எளிதாக்கி இருக்கிறது.