மக்களின் வீண் செலவும் அவற்றை தவிர்க்கும் வழிமுறையும்.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். இவர் கூறும் இந்தத் தத்துவத்தின் ஆழத்தை அறியாமல் இருப்பவர்களே வீண் செலவுகள் செய்து சொத்துக்களை இழப்பவர்கள் ஆவார்கள். தவக்கும் குழந்தை முதல் தள்ளாடும் முதியோர் வரை அனைவரின் மனதிலும் தனக்கு இப்பொருள் இருந்தால், இந்த வசதி இருந்தால் நான் மகிழ்வாக இருப்பேன் என்ற மனநிலை ஆணிவேராய் வேரூன்றி இருக்கிறது.

தன் வாழ்விற்குத் தேவையான பொருட்களை வாங்க அடிப்படையானது   பணம். இந்தப் பணத்தை எப்படிச் சம்பாதிப்பது? சம்பாதித்த பணத்தை எவ்வாறு சிக்கனமாக செலவு செய்வது? என்ற திட்டமிட்டு செயல்படும் மனப்பான்மை பெரும்பாலானவர்களுக்கு  இல்லை என்றே கூறலாம்.
அவ்வாறு இல்லை என்றால் தமிழர்கள் கொஞ்சமும் அறியாத, தெரியாத, பழக்கப்படாத அயல்நாட்டுப் பொருட்களை வாங்கி நுகரும் தன்மைக்கு ஆளாகி இருக்கமாட்டார்கள்.
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இன்றைய மக்கள் சில ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. அவ்வாறு பணத்தைச் செலவு செய்யாமல் இருப்பதில் நமக்கென்ன நன்மை? என இன்றைய சமுதாய மக்கள் கேள்வி கேட்பதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், இவ்வாறு கூறிக்கொண்டு நம் இளைய சமுதாயத்தினர், செய்யும் செலவு கணக்கைப் பார்க்கும் போது கொஞ்சம் மலைப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. இன்றைய நிலையில் வாழும் தலைமுறையினர் மூன்றில் ஒரு பங்கை அனாவசியச் செலவிற்காக பணத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று புள்ளிவிபரங்கள் சொல்வது நமக்கு மலைப்பாகத்தான் இருக்கிறது.

* பொருட்கள் வாங்குதல் (ஷாப்பிங்):

தனக்குத் தேவையான பொருட்களை வாங்குவதைப் பிடிக்காத மனிதர்களே இல்லை எனலாம். காரணம் தனியார்மயம், தாராளமயம் ஆனதின் விளைவாக அனைவரும் இன்று அறிமுகம் இல்லாத பொருட்களைக் கூட வாங்கிக் குவிக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். கிராமம் முதல் நகரம் வரை இருக்கும் ஆண்,பெண் இரண்டு தரப்பும், சம்பளம் வாங்கிய முதல் நாளே தனக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.இதிலும், நகரத்தில் வசிக்கும் மக்களே குடும்பத்திற்கு அவசியமில்லாத செலவுகளும், ஆடம்பரமான செலவுகளும், அழகுசாதனப் பொருட்களை வாங்கும் செலவுகளையும் கூட்டிக் கொள்கின்றனர்.

* அலைபேசி:

பெண்ணுக்கும் அலைபேசிக்கும் எப்போதும் பெற அவசரம் காட்டக்கூடாது. ஏனென்றால் ஒன்றுபோனால் வேறு நல்ல வகை வரும் என நகைச்சுவையாக ஆண்கள் மத்தியில் ஒரு புதுமொழி உண்டு. அந்த வகையில் அலைபேசியைப் பயன்படுத்தாதவர்களை இன்று காண்பதே அரிதாகி விட்டது. இதில் அலைபேசிக்கு (recharge) செய்வதிலேயே முக்கால்வாசி பணம் செலவாகிவிடுகிறதென்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதல் (recharge) தவிர இணைய இணைப்பு கொடுத்து, பாடல்களை பதிவிறக்கும் செய்வது, காணொளிகளை பதிவிறக்கம் செய்வது, (caller tune) மாற்றுவது, ஏன் அலைபேசிகளையே மாற்றுவதென சம்பாதித்தப் பணத்தை இவ்வழியில் வீணடித்துக்கொண்டு இருப்பவர்களே இங்கு அதிகம்.


* திரைப்படம்:

திரைப்படம் என்பது இன்று மக்கள் அதிகம் விரும்பிய பொழுது போக்குகளில் ஒன்று. இதில் இருபிரிவினர் உள்ளனர். வீட்டில் வரும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் படத்தை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் ஒரு பிரிவினர். திரையரங்கம் சென்று படம் பார்ப்பவர்கள் மற்றொரு பிரிவினர். இதில் திரையரங்கம் சென்று படம் பார்ப்பவர்களே அதிகம். இதில் ஆண்களே முதலிடம் வகிக்கின்றனர். தனக்குப்பிடித்த கதாநாயகனின் படத்தை முதல்நாளே காண வேண்டும் என்பதற்குப் பல நூறு ரூபாய் செலவு செய்கின்றனர். ஏன் திரும்பத்திரும்ப அதே படத்தைக் காணும் ஆட்களும் உண்டு. இவ்வாறான வழியில் பணத்தை வீண் விரயம் செய்வதே வாடிக்கையான ஒன்றாகி விட்டது இன்றைய இளம் தலைமுறையினருக்கு.

* உணவகம்:

வீட்டில் அம்மா கையாலோ, மனைவி கையாலோ சமைத்து சாப்பிட்டு வந்த மக்கள், இன்று அதை விட நல்ல சாப்பாடு உணவகத்தில் தான் கிடைக்கிறது என்றெண்ணி இதற்காகப் பணத்தை வீண் செலவு செய்பவர்கள் அதிகம். முன்பெல்லாம் எப்போதாவது உணவகத்திற்குச் சென்றவர்கள், இன்று வாரத்தில் 2,3 நாட்களிலும், கட்டாயமாக வாரத்தின் இறுதி நாட்களிலும் உணவகத்திற்குச் சென்று ஆரோக்கியமற்ற உணவை உண்டு உடலைக் கெடுத்துக்கொள்ளும் கூட்டம் நாட்டில் ஏராளமாய் உள்ளது.

* நொறுக்குத் தீனிகள்:

இதில் இரு பாலினமும் இந்தச் செலவுகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். என்றாலும் இதில் ஆண்களின் செலவு அதிகமாக இருக்கிறது. டீ,காபி,வடை,பஜ்ஜி,பர்கர்,பீட்சா,பேல்பூரி,கெண்டகி சிக்கன் என நொறுக்குத் தீணிக்காகச் செலவு செய்யும் உணவுப் பட்டியல் நிகழ்கிறது. இதில் பாக்கெட் பணத்தைக் காலி செய்வதில் டீ கடைகளின் பங்கே பிரதானமாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் இதற்காகச் செலவு செய்வதை இங்கிருக்கும் எவரும் தவிர்க்க முடியவில்லை என்பதை விட, தவிர்க்க விரும்பவில்லை என்றேதான் கூற வேண்டும்.

ஆதலால் கஷ்டப்பட்டு உழைத்தப் பணத்தை நமக்கு எது தேவையோ, நம் பண வரவுக்கு எவ்வளவு செலவழிக்க முடியுமோ அதற்குள் வாழப் பழகுவதே வீண் பண விரயத்தைத் தடுக்கும் முதற்கட்ட நடவடிக்கையாகும். மேலும் நமக்கு செய்யவிருக்கும் வேலையை சரியான நேரத்தில் செய்து முடித்தால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம்.
இதில் மின் கட்டணம், பள்ளி, கல்லூரிக் கட்டணம், வருமான வரிக் கட்டணம் இவ்வாறு செலுத்த வேண்டிய பல கட்டணங்களை நேரத்திற்குக் கட்டாவிட்டால் பின்னாளில் அபராதத் தொகையும் சேர்த்துக் காட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறோம்.

சிலர் முக்கிய நிகழ்வுகளுக்கு பயணப்பட வேண்டியிருக்கும் சூழலை வைத்துக்கொண்டு பொறுமையாக இருப்பர். நிகழ்வு நெருங்கிவரும் இறுதி நேரத்தில் டிராவல்ஸ் மற்றும் தட்கல் முறையில் பயணச்சீட்டை அதிக விலை கொடுத்து வாங்கி பயணப்படுவர். இதுபோன்று திட்டமிடாமல் இருத்தலின் விளைவால் வீண் பணவிரயம் செய்வதையும் பலர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

நேர்மையாக உழைத்து வரும் உன்னதமான பணத்தை வீண் செலவுக்கு விரயமாக்குவதை விட அதைச் சேமித்து வைப்பதே சிறந்த முறையாகும். பணத்தைச் சேமித்து வைப்பதே சேமிப்பு இல்லை, பணத்தைச் சிக்கனமாக செலவு செய்வதும் ஒரு சேமிப்புதான் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டாலே மிக நல்லது.