என் மகனை கமல் அறிமுகம் செய்வது பெருமையாக உள்ளது! - நடிகர் ஜெயராம் உருக்கம்

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை நேற்று மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த விழாவில் கமல் கலந்து கொண்டார். த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படப்பிடிப்புக்காக தூத்துக்குடியில் இருந்தவர், ஜெயராம் சொன்ன ஒரே காரணத்துக்காக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு இந்த விழாவில் கலந்து கொண்டார்.

அதனால் கமலின் இந்த வருகையை பெருமையோடு குறிப்பிட்ட நடிகர் ஜெயராம். இந்த விழாவுக்கு நான் ஒரு நடிகராக வரவில்லை. ஒரு தந்தையாகத்தான் வந்திருக்கிறேன்.



இந்த அரங்கில் ஒரு மூலையில் அமர்ந்து இந்த விழாவை கண்டுகளிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். எனது சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள சிறுகுடி என்ற ஒரு சின்ன குக்கிராமம். நான் சிறுவனாக இருந்தபோது, கும்பகோணம் பகுதியில் ஜூபிடர், செல்வம், ராஜா ஆகிய தியேட்டர்கள்தான் இருந்தன. அப்போது அதில் ஒரு தியேட்டரில் கமல் சார் நடித்த மனோசரித்திரா என்ற படம் ஓடியபோது நான் என் அம்மாவுடன் சென்று அந்த படத்தை பார்த்து ரசித்துள்ளேன்.

அப்படிப்பட்ட நான் இப்போது அந்த ஹீரோ கமல் சார் பக்கத்தில் இருக்கிறேன் என்கிறபோது ரொம்ப சந்தோசமாக உள்ளது. உலக நாயகன் என்று சொல்லப்படும் கமல் சார் இன்றைக்கு என் மகனை அறிமுகம் செய்கிறார் என்றால் அது அவன் செய்த பாக்கியம். இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது. அது காளிதாசுக்கு கிடைத்திருக்கிறது.

மேலும் இந்த விழா பற்றி நான் கமல் சாரிடம் போனில் சொன்னபோது, கொஞ்சம்கூட அவர் தயக்கம காட்டவில்லை. என்னைக்கு வரனும், எப்ப வரனும் என்று மட்டும்தான் கேட்டார். நான் டிக்கெட் போட்டு விடுகிறேன் என்று சொன்னால், அப்படியென்றால் வரமாட்டேன் என்பார் என்பதற்காக நான் அவரிடம் டிக்கெட் பற்றியே பேசவில்லை. அதோடு, அவர் இங்கு வந்ததற்காக நான் நன்றி சொன்னாலும் அவருக்கு பிடிக்காது. ஏனென்றால் அவரும் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அதனால் அவர் கூறுவதைப்போலவே நன்றி சொல்லி அவரை வேற்று மனிதராக்கவும் நான் விரும்பவில்லை என்று உருக்கமாக பேசினார் ஜெயராம்.