ரோஜாவின் உயிருக்கு ஆபத்து! -டைரக்டர் ஆர்.கே.செல்வமணி அச்சம்

சமீபத்தில் ஆந்திராவிலுள்ள நகரி தொகுதியில் நடந்த ஜாத்திரை திருவிழாவில் அந்த தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு முதல்மரியாதை அளிக்கப்படயிருந்தது. ஆனால் அதே திருவிழாவுக்கு வந்திருந்த தெலுங்குதேசம் கட்சியினர் அந்த கோயிலுக்குள் புகுந்து ரோஜாவுக்கு முதல்மரியாதை அளிப்பதை எதிர்த்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதில் ரோஜா கையில் வைத்திருந்த ஆரத்தி தட்டு கீழே விழுந்ததோடு, அந்த சந்தர்ப்பத்தில் யாரோ அவரது கையிலும் கத்தியால் குத்தி காயப்படுத்தினார்.
இதையடுத்து, ரோஜாவின் ஒய்.எஸ்.ஆர். காஙகிரஸ் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும், தெலுங்கு தேசம் கட்சியினர் ஜாத்திரை திருவிழாவில் நடந்த பிரச்சினைக்கு ரோஜாவே காரணம்.

அதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அதோடு அவரது கொடும்பாவியையும் எரித்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ரோஜாவின் கொடும்பாவியை தெலுங்கு தேசம் கட்சியினர் எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்துள்ளது. இதில் தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் எம்எல்ஏவான கிருஷ்ணம்மா நாயுடு என்பவரின் கொடும்பாவியை ரோஜாவின் ஒய்எஸ்ஆர் காங்கிரசார் எரிக்க முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி விட்டார்களாம்.
இதனால் ரோஜாவின் கொடும்பாவியை எரித்தபோது கண்டு கொள்ளாமல் இருந்த போலீசார், கிருஷ்ணம்மா நாயுடுவின் கொடும்பாவியை எரிக்க மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் நகரி போலீசார் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக இருப்பது தெரிகிறது என்று தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரசார் கொடி பிடித்து வருகின்றனர்.
இதுபற்றி ரோஜாவின் கணவரான டைரக்டர் ஆர்.கே.செல்வமணி கூறும்போது, ரோஜா அதிக பக்தி உடையவர். அதனால் விரதம் இருந்து ஜாத்திரை திருவிழாவில் கலந்து கொண்டார். தொகுதி எம்எல்ஏ என்பதற்காக தனக்கே முதல் மரியாதை தர வேண்டும் என்றெல்லாம் அவர் செயல்படவில்லை. கடவுளுக்கு முன்பு அனைவரும் சமம்தான். ஆனால் ரோஜாவின் ஆரத்தி தட்டை தட்டி விட்டதால்தான் பிரச்சினை பெரிதானது. மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகு ரோஜாவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.