அஞ்சான் ஆடியோ விழா ரத்து ஏன்?

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் இசைவெளியீட்டுவிழா நாளை சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற இருந்தது. தமிழக அரசுக்கு சொந்தமான அந்த மையத்தில் அஞ்சான் இசைவெளியீட்டுவிழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். என்ன காரணத்தினாலோ அங்கே விழா நடத்த திடீரென அனுமதி மறுக்கப்பட்டது.

அதனால் அவசரஅவசரமாக சத்யம் தியேட்டருக்கு இடத்தை மாற்றினார்கள். முதலில் அனுமதி கொடுத்த சத்யம் தியேட்டர் நிர்வாகம் சில நாட்கள் கழித்து அனுமதியை ரத்து செய்தது. காரணம் கேட்டபோது, சூர்யாவின் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள். அவர்களால் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தொல்லை ஏற்படும் என்று காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.

வர்த்தக மையம் மற்றும் சத்யம் தியேட்டரில் விழா நடத்த முதலில் அனுமதி கொடுத்துவிட்டு பிறகு அனுமதி மறுக்கப்பட்டதற்குப் பின்னால் சில காரணங்கள் இருப்பது தாமதமாகவே அஞ்சான் தயாரிப்பாளர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. எனவே வேறு இடத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த முயற்சி செய்தால்.. அதற்கும் ஏதாவது பிரச்சினை வரும் என்று எண்ணி அஞ்சான் ஆடியோ விழாவையே ரத்து செய்துவிட்டனர். அதற்கு பதிலாக ஊடகங்களை அழைத்து பிரஸ்மீட் மட்டும் வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் அஞ்சான் படத்துக்கு திடீர் முட்டுக்கட்டை போடப்பட்டதற்கான காரணம் தற்போது தெரிய வந்நதிருக்கிறது. அதாவது இப்படத்தின் டிவி. ரைட்ஸ் தொடர்பாக இரண்டு முன்னணி சேனல்களுக்கு இடையே நடந்த போட்டியில், முன்னணி சேனல் ஒன்றுக்கு படத்தை கொடுத்துவிட்டனர் அஞ்சான் படக்குழுவினர். இதனால் செல்வாக்கு மிகுந்த மற்றொரு டிவி சேனலுக்கு ஏமாற்றம். அதன் தொடர்ச்சிதான் அஞ்சான் ஆடியோ விழாவுக்கு ஏற்படுத்தப்பட்ட முட்டுக்கட்டை என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

அஞ்சான் ஆடியோ விழாவை தமிழ்நாட்டில் ரத்து செய்துவிட்டாலும், அதன் தெலுங்கு டப்பிங்கான சிக்கந்தர் படத்தின் ஆடியோ விழாவை ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர்.