வேட்டி அணியாமைக்கு காரணம் என்ன? விளக்கம் தருகிறார் வைரமுத்து.


சென்னை கிரிக்கெட் கிளப்பிற்கு வேட்டி கட்டிச் சென்ற ஒரு நீதிபதியும், வக்கீலும் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் தமிழ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு:

வேட்டி கட்டியவர் நீதிபதியாக அங்கு செல்லவில்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தாலும், தனிமனிதனாக அவரை கருதினாலும் அவருக்கு இழைக்கப்பட்டது அநீதிதானே. இதற்காக குரல் கொடுத்த தமிழக அரசு உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். தறியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் துணி என்பதிலேயே அதற்கு வேட்டி என்று பெயர்.

வேட்டி என்ற சொல் தமிழுக்கு மட்டுமே உரிய சொல். எனவே வேட்டியை தான் வாழும் தட்பவெப்ப நிலைக்கேற்ற உடையாக கண்டுபிடித்தவனே தமிழன்தான். உடுத்தல் என்பது பண்பாடு, உடை என்பது நாகரீகம். வேட்டி தமிழின் பண்பாடு அதன் நூலை இழுத்து பிடித்தால் அந்த நீளம் சொல்லும் தமிழன் பண்பாட்டு வரலாற்றை.

இவ்வளவு பேசுகிற நீ ஏன் வேட்டி கட்டுவதில்லை என்று சிலர் கேட்ககூடும். என்னை ஒரு வேலைக்காரனாக கருதிக் கொள்ளும் இடங்களில் எல்லாம் வேறு உடை அணிகிறேன். விடுதலை உணர்வு வேண்டும் போதெல்லாம் வேட்டி மட்டுமே அணிகிறேன். வேட்டி கட்டியவரை நுழைய விடவில்லை என்பதற்காக வெடித்து கிளம்பினோம். தமிழ் நாட்டு பள்ளிகளில் தமிழே நுழைய முடியவில்லையே என்ன செய்யப்போகிறோம்.
இவ்வாறு வைரமுத்து அந்த அறிக்கையில் தெரிவித்திருகிறார்.