விஷால் பிறந்த நாளன்று ‘பூஜை’ பட டீஸர்!

‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்குப் பிறகு விஷால் நடிக்கும் படம் ’பூஜை’.

ஹரி இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் விஷால்-ஸ்ருதி ஹாசன் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கேரக்டர்களில் சத்யராஜ், ராதிகா சரத்குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

அதுவும் இதில் சத்யராஜ் போலீஸ் அதிகாரி வேடத்தில் மிரட்ட இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ப்ரியன் ஒளிப்பதிவை கையாள்கிறார். இந்நிலையில் ‘பூஜை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை விஷாலின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

‘பூஜை’ படத்தை விஷாலே தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ஏற்கெனவே இயக்குனர் ஹரியும், விஷாலும் இணைந்து ‘தாமிரபரணி’ என்ற வெற்றிப்படத்தை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.