பாலிவுட்டில் கால்பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. அதையடுத்து ஏராளமான படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த யுவன், கடந்த 17 ஆண்டுகளில் 100 படங்களுக்கு இசையமைத்து விட்டார்.

பிரியாணி படத்தில் முதல் சதமடித்த அவர் அடுத்து அஞ்சான் படத்திலிருந்து அடுத்த சதத்தை எதிர்நோக்கி இசையமைக்கத் தொடங்கியிருக்கிறார்.
ஆனால் முதல் சதமடிக்கும் வரை தென்னிந்திய படங்களுக்கு இசையமைப்பதிலேயே ஆர்வமாக இருந்து வந்த யுவன், தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இந்தியில் குனால் தேஷ்முக் என்பவர் இயக்கும் ராஜா நட்வர்லால் என்ற படத்திற்கு தற்போது இசையமைத்துள்ளார் யுவன். திரில்லர் கதையான அப்படத்தில் 3 ரொமான்டிக் பாடல்களை கொடுத்துள்ளாராம்.

அதோடு, பாலிவுட்டில் இசைப்புரட்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்த படத்தில் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் பின்னி எடுத்திருக்கிறாராம் யுவன். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் இணையதளங்களில் வெளியாகி ஹிட்டாகி வருவதால் யுவனின் பெயரும் பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறதாம்
இதையடுத்து, தமிழில் இருந்து இந்திக்கு சென்று கொடிநாட்டிய ஏ.ஆர்.ரகுமானை போன்று அடுத்து யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் இந்தி சினிமாவில் பலமாக காலூன்றும் ஆர்வம் மேலோங்கி உள்ளதால், தற்போது வேறு சில படங்களுக்கு இசையமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகக்காக அவர் மும்பையில் முகாமிட்டுள்ளாராம்.